செய்திகள்

மின்சாரக் கதிரை தொடர்பாக இனிமேல் எவரும் பேசப் போவதில்லை

கடந்த ஐந்து வருடங்களில் பேசப்பட்ட மின்சாரக் கதிரை தொடர்பில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் எவரும் பேசவில்லை. மின்சார கதிரை என்பதனை எமது அகராதியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாராம்பல மயூரபாத மத்திய மகா வித்தியாலத்தில்  நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில் ;
உலகின் இந்த அங்கீகாரத்துடன் பல வருடங்களாக நாட்டில் மக்கள், அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது, ஊடகவியலாளர்கள் பேசிய மின்சார கதிரை என்ற வார்த்தை அகராதியிலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களை அறிவிக்கும் மார்ச் 28 ஆம் திகதியானது, கடந்த 5 வருடங்களுக்கு முன்னர், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், படித்தவர்கள், புத்திஜீவிகளின் விசேட கவனம் செலுத்தும் நாளாக இருந்து வந்தது.
போரின் பின்னர் நடைபெற்றதாக கூறப்படும் நிலைமைகள் குறித்து எப்படியான தீர்மானங்கள் எடுக்கப்படும், பாதுகாப்பு படையினர் மீது எவ்வாறான குற்றச்சாட்டுக்கள்  சுமத்தப்படும் என்று அனைவரும் பதற்றத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
எனினும் புதிய அரசாங்கத்தின் ஒரு வருட பதவிக்காலத்தின் பின்னர் இந்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழு கூடியதை எவரும் அறியவில்லை.
இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கையில் எவரும் ஜெனீவா தொடர்பில் பேசவில்லை. மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தொடர்பிலும் பேசவில்லை. இந்த வருடம் மார்ச் மாதம் மனித உரிமைப் பேரவை கூடியதா என்பது இன்று சாதாரண மக்களுக்கு தெரியாது.
எனினும் கடந்த ஐந்து வருடங்களில் பழைய பத்திரிகைகளைப் பார்த்தால் இந்த காலப்பகுதியில் ஜெனீவா விவகாரமே பிரதான தலைமைப்புச் செய்திகளாக வெளி யாகியிருந்தன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலகில் அனைத்து நாடுகளும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அரச கொள்கையில் ஜனநாயகமும், மனித உரிமைøயும் உறுதிப்படுத்தப்படுகிறது என்பதனை புரிந்து கொண்டுள்ளன.
இதனால் கடந்த ஐந்து வருடங்களில் பேசப்பட்ட மின்சார கதிரை தொடர்பில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் எவரும் பேசவில்லை. மின்சார கதிரை என்பதனை எமது அகராதியில் இருந்து நீக்கியுள்ளோம்.
படையினர் மட்டுமல்லாது, தாயகத்தின் கௌரவத்தை பாதுகாத்துக் கொண்டு, புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறது.  மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் இருக்கும் நாடு என்ற வகையில், இலங்கை தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு உட்பட சகல சர்வதேச நாடுகளினாலும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
n10