மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார்
கல்விச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மியன்மார் மாணவகள் மீது பொலிஸார் தடியடி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதுடன் 150 ற்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்ட பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும்,தகவல்கள் வெளியாகியுள்ளன.
யங்கோனிற்கு வடக்கேயுள்ள பகுதியொன்றிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஓரு வாரகாலமாக நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாடங்களே இன்று வன்முறையில் முடிவடைந்துள்ளன.
பல்கலைகழகங்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கவேண்டும்,மாணவர் அமைப்புகளை அமைப்பதற்கு உரிமை மற்றும் சிறுபான்மை மொழிகளை கற்பதற்கான அனுமதி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் பாரிய ஆர்பாட்டபேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். எனினும் பொலிஸார் அந்த பேரணியை தடுக்கும் விதத்தில் பல நடைவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர், இதன் காரணமாக பதட்ட நிலை அதிகரித்து வந்தது.
இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறிப்பிட்ட பேரணி ரங்கூனை சென்றடைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும் கொடிகளை கொண்டுசெல்வதற்கும்,பாடல்களை பாடுவதற்கும்,வாகன தொடரணியாக செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் சீற்றமடைந்த மாணவர்கள் பொலிஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்வதற்கு முயன்றுள்ளனர்.
நூற்றுக்கணக்கான பொலிஸாரின் தடுப்புவேலியை உடைத்துக்கொண்டு செல்ல முயன்ற மாணவர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளனர். காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பலரை பொலிஸார் இழுத்துக்கொண்டு சென்றதாகவும், பலர் அருகிலுள்ள பௌத்த மடாலயத்திற்குள் தஞ்சம் புகுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் பலர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மியன்மாரின் தகவல் அமைச்சு 127 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் ஆரம்பித்த குறிப்பிட்ட எதிர்ப்பு பேரணி பாரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மியன்மாரில் முன்னெடுக்கப்படும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்த அதிருப்தியினை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இந்த பேரணி மாறுகின்றதா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளன.
மியன்மார் சந்தித்த மிகவும் தீவிரமான ஆர்ப்பாட்டங்களில் மாணவர்களே கடந்த காலங்களில் முன்னணியில் நின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரின் இன்றைய தாக்குதல்கள் மியன்மாரின் கடந்த கால இராணுஆட்சியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.