செய்திகள்

மிருசுவில் கொலை விவகாரம் : இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை , 4 பேர் விடுதலை

2000ஆம் ஆண்டு யாழ்பாணம் மிருசுவில் பகுதியில் 8 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி மிருசுவில் பகுதியில் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 தமிழர்கள் கொடுரமான முறையில் கொல்லப்பட்டமை தொடர்பாக அப்போது இராணுவத்தில் பணியாற்றிய 5 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான  வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதி மன்றத்தில் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வழங்கப்பட்ட போது சுனில் ரத்தநாயக்க என்பவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றைய நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு முறைப்பாட்டாளர்களினால் முடியாது போனதால் அவர்கள் அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.