செய்திகள்

மீண்டும் சந்திரிகா: கட்சியின் யாப்பு சீர்திருத்தக்குழுவின் தலைவராக நியமனம்

திடீரென லண்டன் சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க நாடு திரும்பி இருக்கின்றார். மகிந்த ராஜபஷ போன்ற ஒருவருடன் சமமான பதவியை சுதந்திரக் கட்சி வழங்கிய விடயத்தில் தனது அதிருப்த்தியைத் தெரிவித்து கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்தே அவர் லண்டன் சென்றதாகச் சொல்லப்பட்டது.

சுதந்திரக் கட்சியின் போஷகர்களாக முன்னாள் ஜனாதிபதிகள் என்ற முறையில் மகிந்த ராஜபக்ஷவும், சந்திரிகா குமாரதுங்கவும் நியமிக்கப்பட்டார்கள். மகிந்தவுக்கு சமமாக தன்னையும் நியமித்தமை சந்திரிகாவுக்கு சீற்றத்தைக் கொடுத்திருந்தது.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்க குமாரணதுங்கவை அவருடைய இருப்பிடத்திற்குச் சென்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கட்சி யாப்பு புனரமைப்புக் குழுவின் தலைவராகவும் தற்போது சுதந்திரக் கட்சி சந்திரிக்காவை நியமனம் செய்திருக்கின்றது. இதன்மூலம் கட்சியின் முக்கிய பதவி ஒன்றுக்கு சந்திரிகா வரலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அமைப்பாளர்களை நியமிக்கின்ற நடவடிக்கைகளுக்கும் என மூவர் அடங்கிய குழுவென்றை ஜனாதிபதி மைத்திரிபால நியமித்திருக்கின்றார். நிமல் சிரிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந் ஆகியோர்  இதில் அடங்குகின்றார்கள்.