செய்திகள்

மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா

தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

காலை 10.37: மணி காலை 10.37 மணிக்கு போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டார். வழி நெடுக அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காலை 11 மணி: காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார். பதவியேற்க உள்ள அமைச்சர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்திருந்தனர். பின்னர் வந்த ஆளுநரை ஜெயலலிதா பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தோடு, அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

காலை 11.09 மணி காலை 11.09 மணிக்கு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, காமராஜ், செந்தில் பாலாஜி, சம்பத், வேலுமணி உள்பட 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சரியாக காலை 10.37க்கு புறப்படுகிறார்.

பதவி ஏற்பு விழாவுக்காக, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விழாவில், முதலமைச்சராக ஜெயலலிதாவுக்கு, கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பதவி ஏற்க உள்ளனர்.புதிய அமைச்சரவையில் பெரும்பாலும், முன்னர் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டு, முன்பு அவர்கள் வசமிருந்த துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவிற்காக சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது. மேலும், ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பதை கொண்டாடும் விதமாக அ.தி.மு.க. தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்துள்ளதால் அண்ணாசாலை, பல்லவன் சாலை போன்ற பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சாலைகளில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் பணிக்கு செல்பவர்கள் பெருத்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

முன்னதாக, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.யாகவும் முதலமைச்சராகவும் பதவி வகிப்பதற்கான தடை நீங்கியது. அதனால், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி. மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 7 மணிக்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக ஜெயலலிதாவை தேர்ந்து எடுத்தனர்.

அதன் பின், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பி.பழனியப்பன் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு, ஓ.பன்னீர்செல்வம் கவர்னர் ரோசய்யாவிடம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும், சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான தீர்மானத்தையும் வழங்கினார்.

அதை ஏற்று கொண்டு ஜெயலலிதாவுக்கு, புதிய அமைச்சரவையை உடனே அமைப்பதற்கான அழைப்பை கவர்னர் விடுத்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா, நேற்று பிற்பகல் 2 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவை, கவர்னரின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவரை கவர்னர் ரோசய்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. சட்டசபை கட்சி தலைவராக தான் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான தீர்மானத்தை ஜெயலலிதா, கவர்னரிடம் வழங்கினார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ப.மோகன், பா.வளர்மதி உள்ளிட்ட 28 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை பட்டியலை வழங்க, அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.