செய்திகள்

மீண்டும் 1987இல் ஈழத்தமிழர்கள்

மருத்துவர் சி.யமுனாநந்தா

உலகில் தற்போது நிகழும் அரசியல், பொருளாதார, இராணுவ மாற்றங்களை ஆராயும்போது அவற்றின் பாதிப்புக்கள் ஈழத்தமிழர்களை மிகவும் தாக்கும். இலங்கைத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் கடந்த 200 வருடங்களுக்கு மேலாகச் செல்வாக்குச் செலுத்திய உலக வல்லாதிக்கம் தற்போது புதிய பரிமாணத்தில் தாக்குகின்றது.

முன்னர் ஐக்கிய இராச்சியம் உலகின் முதன்மை வல்லரசாக இருந்தபோதே தமிழகத் தமிழர்களின் சொத்துக்களை குறிப்பாக சைவ ஆலயங்களின் சொத்துக்களைச் சூறையாடி, தமிழர்களைப் பல நாடுகளுக்கு கூலித் தொழிலாளர்களாக நாடு கடத்தியது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஆங்கிலேயரின் வகிபாகத்தினை அமெரிக்கா தலைமையேற்று உலகில் நவீன அடக்குமுறைகளை மேற்கொண்டது. இதனை ஜனநாயகம் என்ற போர்வையில் பல நாடுகளில் ஆயுதப் போராட்டங்களை உருவாக்கி அடக்கி கிளர்ச்சிகளை உருவாக்கி அமைதி இல்லாத உலகை உருவாக்கியது. இதற்கு ஐக்கிய அமெரிக்காவிற்கு பக்கபலமாக இஸ்ரேல் இருந்தது. அரபுநாடுகளும், வட ஆபிரிக்க நாடுகளும் ஆயுத மோதல்களால் அழிந்தமைக்கு குறிப்பாக 1990ம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் ரஸ்யாவின் பெரஸ்டிரொய்க்கா என்கின்ற மிகேயில் கோபர்சேர்வின் மறுசீரமைப்புக்குப் பின் ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கே காரணம்.

மத்திய ஆபிரிக்க நாடுகளில் நிகழ்ந்த ஆயுத மோதல்களும், இனவழிப்புக்களும், நிலையற்ற அரசுகளின் ஆட்சிகளும் உலகின் பொருளாதார வல்லரசான சீனாவுடனும் பழைய வல்லரசான ரஸ்சியாவின் ஆயுத எச்சங்களுடனும் ஐக்கிய அமெரிக்காவின் போட்டியுமே காரணமாகும்.

தற்போதைய ஐரோப்பிய ரஸ்யப் போர்ச்சூழல் ஒட்டுமொத்த உலகத்தையும் பொருளாதார யுத்தத்தில் ஈடுபடவைத்து உள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவில் உக்ரெயினுக்கு ஆதரவாக யுத்தத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் தவறானவை. போர் நிறுத்தம், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மிகவும் அவசியமானவை. இவற்றினை ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் தமது அரசுக்கு எடுத்துக்கூறல் வேண்டும். ஐரோப்பாவில் ஏற்படும் அமைதியே உலகில் நிரந்தர பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். ஆக்கிரமிப்பாலும், அடாவடியாலும் பொருளாதாரத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல் நாகரீகம் அற்றுப்போதல் வேண்டும்.

ஈழத்தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் நோக்கும்போது எமது அரசியல் அணுகுமுறைகள் உலக நியத்தை நோக்கியதாகவும், எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனம் மிக்கதாகவும் மிளிர வேண்டும். உலக அரசியல் போக்கை கையாளும் இராஜதந்திரம் இல்லாவிடில் நாம் ஆபிரிக்கர் போலவும், அரேபியர்கள் போலவும் எமக்குள்ளேயே முரண்பாடான அரசியலுடன் அழிவுறுவோம்.

தற்போதைய உலக அரசியலில் நிகழும் பொருளாதாரப் போரில் சீனாவுடன் போட்டியிட்டு முன்னிலை பெற முனையும் இந்தியாவுடன் நட்பான அரசியல் அணுகுமுறை எமக்குத் தேவை. பல இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்தல் விருப்பமான தெரிவாக அமையலாம். ஆனால் நாம் எமது மண்ணில் நீடித்துவாழ வழிகளை அமைப்பதே முக்கியம். இன்று உலகில் நேர்மை, ஜனநாயகம், மனித நேயம் என்பன போலி முகங்களுடன் இயங்குகின்றன.

1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் எவ்வாறு தமிழர்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதாகக் கூறி அன்றைய இலங்கை ஜனாதிபதி அவர்கள் ஜே. ஆர். ஜெயவர்த்தனா இந்தியாவைக் கையாண்டாரோ அவ்வாறே 2023இல் இன்றைய ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண நகருக்குள்ளேயே இந்தியாவின் முதலீட்டில் பௌத்த கலாச்சார அமைச்சுக்கு பாரிய செயலகத்தை கையகப்படுத்தி உள்ளனர். இச் செயலானது ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அபாய அறிவிப்பாகவே உள்ளது. அதாவது ஈழத்தமிழர்கள் தற்போது உலகில் நடைபெறும் பொருளாதார யுத்தத்தின் வியாபகத்தை உணரவில்லை. தீனுண்மிப் பேரிடர், உக்கிரேயின் நெருக்கடி, துருக்கி சிறிய நிலநடுக்கம் என்பன உலகில் ஒட்டுமொத்த மனித நேயத்தைப் பாதித்துள்ளது. இவை மனிதகுலத்தின் அண்மைய வரலாற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் சிறுபான்மையினராக இருப்பதனால் பொருளாதார யுத்ததில் பெரும் பாதிப்பை பெரும்பாலும் அரசு திணிக்கும். எமது மண்ணிலேயே எமக்கென கலாச்சார மண்டபத்தை முதன்மைப்படுத்த முடியாத அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளமை இதனை எமக்கு இன்று புலப்படுத்துகின்றது.

மேற்குலகம் ரஸ்சியாவின் ஆக்கிரமிப்பால பொருளாதாரத்தில் பலம் இழக்கும்போது புலம்பெயர் தமிழர்களது பொருளாதார வளமும் பாதிக்கப்படும். சீனாவின் பொருளாதார மேன்மையும் எக்காலமும் தமிழர்களுக்குச் சார்புடையதில்லை. எனவே இந்தியாவில் இருந்து ஆக்கபூர்வமான பொருளாதார ஆதரவை ஈழத்தமிழர்கள் பெறவேண்டும். இதில் பின்னடைவுகளை எமது அரசியல்வாதிகளும், எமது அரச அதிகாரிகளும் ஏற்படுத்துவதனை தவிர்த்தல் வேண்டும். அன்றேல் மீண்டும் நாம் 1987ம் ஆண்டிற்கே காலடி எடுத்து வைக்க வேண்டும்.