செய்திகள்

மீனவர் விவகாரத்தை மனிதாபிமானமாக அணுகவேண்டும்: ரணிலிடம் சுஷ்மா

வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால் மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி இலங்கைக்குச் செல்ல உள்ள நிலையில், தமிழக மீனவர்கள் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் ஊடுவி னால், அவர்களை சுட்டுத் தள்ளுவதில் தவறில்லை என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் தந்தி டி.வி.க்கு விக்ரமசிங்கே அளித்த பேட்டியில், “இலங்கை வடக்கு மாகாண மீனவர் களின் வாழ்வாதாரத்தை தமிழக மீனவர்கள் பறித்துக் கொள்கின்றனர். எனவே, எல்லை தாண்டி வரும் மீனவர் களை கடற்படையினர் சுடுவதில் எவ்வித மனித உரிமை மீறலும் இல்லை. இதை சட்டம் அனுமதிக்கிறது.

உதாரணமாக, மர்ம நபர் ஒருவர் எனது வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றால், அவரை நான் சுட்டுத் தள்ளலாம். இதனால், அந்த நபர் உயிரிழக்கவும் நேரலாம். இதற்கு சட்டம் அனுமதி அளிக்கிறது.

எல்லை தாண்டும் தமிழக மீனவர் களை சிறைபிடிக்கக் கூடாது என்று கூறும் இந்திய அரசு, இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களை கைது செய்தது ஏன்? எங்கள் நாட்டிடம் எதிர்பார்க்கும் அதே கருணையை இத்தாலி வீரர்களி டமும் காட்டியிருக்கலாமே” என்று கூறியிருந்தார்.

ரணிலின் இந்தக் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி இலங்கைக்குச் செல்ல உள்ள நிலையில், விக்ரமசிங்கேயின் இந்த கடுமையான நிலைப்பாட்டால் மத்திய அரசும் அதிருப்தி அடைந்துள்ளது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 13-ம் தேதி இலங்கைக்குச் செல்ல இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்குச் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே உள்ளிட்டோரை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். விக்ரமசிங்கேவுடனான சந்திப்பின்போது, மீனவர் பிரச்சினை தொடர்பான பேட்டி குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதீன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ரணில் விக்ரமசிங்கேவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக மீனவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் அளித்த பேட்டி குறித்த பிரச்சினையை எழுப்பினார்.

மீனவர்கள் பிரச்சினை வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று சுஷ்மா எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், தமிழக மீனவர்கள் பிரச்சி னையை இத்தாலி கடற்படையினர் கைது விவகாரத்துடன் விக்ரம சிங்கே இணைத்துப் பேசியுள்ளார். இந்த இரண்டு விவகாரங்களும் வெவ்வேறானவை. இதைத் தொடர்புபடுத்த முடியாது.

இந்தப் பிரச்சினையில், இந்தியா வின் நிலைப்பாட்டை சுஷ்மா எடுத்துக் கூறியுள்ளார். இதை விக்ரமசிங்கே புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம். இந்த விவகாரத்தில் நட்பு ரீதியாகவும் சமரச முறையிலும் இலங்கை அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண விரும்புகிறோம்.

எனினும், இந்தப் பிரச்சினையில் உடனடியாக தீர்வு காண முடியாது. இருதரப்பு மீனவர் சங்கப் பிரதிநிதி களும் சந்தித்து பேச வேண்டும். இந்தச் சந்திப்பு பிரதமர் மோடியின் பயணத்துக்கு முன்பு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, மோடியின் இலங்கைப் பயணத்துக்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கான தேதி முடிவு செய்யப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமர வீராவை, சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப் பயணத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனிடையே இந்தியா- இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர் பாக இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நேற்று ஆலோசனை நடத்தினர்.