மீன் பிடிக்க சென்ற இளைஞரின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் காசல்ரீ நீர்தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் நோர்வூட் அயரபி தோட்டத்தை சேர்ந்த 22 வயதான சேகா் அமரதேவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
குறித்த இளைஞன் மீன் பிடிக்க சென்று மீண்டும் வீடு திரும்பாததையடுத்து அதன்பின் இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தார் நோர்வூட்பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனா்.
இந்நிலையில் இன்று பொலிஸார்,பொது மக்கள், கடற்படையினா் ஆகியோர் இணைந்து நீர்தேக்கத்தில் தேடுதல் மேற்கொண்ட போது மேற்படி இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவா் நேற்றைய தினம் மாலை தனது நண்பர் ஒருவருடன் இணைந்து நீர்தேக்கத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அங்கு இருவரும் பிரிந்து சென்று மீன் பிடிக்கின்றபோது குறித்த இளைஞன் காணாமல் போயிருந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.
அட்டன் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் பின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.