செய்திகள்

மீரியபெத்த மக்களுக்கு வீடு : இரண்டு தடவை அடிக்கல் நட்டுவைத்தனர்

கொஸ்லந்த மீரிய பெத்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே .வேலாயுதம், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் ஆகியோர், அனர்த்தித்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான நிலத்தினை தெரிவு செய்யும் பணியில் இன்று ஈடுப்பட்டனர்.

இதற்கமைய பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மக்கள் தெனிய பகுதியில் குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான புதிய நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் அவர்கள் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த நிலத்தின் மண் தேசிய கட்டிட ஆராச்சி நிலையத்தினால் அனைத்து விதமான பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த நிலையத்தினால் வழங்கப்பட்ட மண் பரிசோதனை தொடர்பான நற்சான்றிதழுக்கு அமையவே நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கமைய குறித்த நிலப்பரப்பில் ஒரு குடும்பத்திற்கு 7 பேர்ச்சர்ஸ் அளவிலான நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு தனித்தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்பதோடு, மக்கள் தெனிய எனும் பகுதி தமிழ் குடியிருப்பு தொகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளுடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அது மாத்திரமின்றி புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான காணி உரிம பத்திரம் அனைத்து விதமான உத்தியோகப்பூர்வ பதிவுகளுடனும் பதிவு செய்யப்பட்டு கணவன் மற்றும் மனைவியின் பெயரில் வழங்கப்படும்.

இந்த வீட்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் 27 ஆம் திகதி பெருந்தோட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே வேலாயுதம், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சர் பி திகாம்பரம் கல்வி இராசாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்படவுள்ளதுடன் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகளை எதிர்வரும் ஐந்து மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே வேலாயுதம் குறிப்பிட்டார்.