செய்திகள்

முகப்புத்தகத்தில் காதல் வலைவீசி யுவதிகளின் நகைகளை அபகரித்தவர் வவுனியாவில் கைது!

முகப்புத்தகம் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடம் காதல் வலைவீசி நகைகளை அபகரித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் முகப்புத்தகம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி தன்னை ஒரு பணக்காரனாக காட்டி அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தனிமையில் அழைத்து நகைகளை அபகரிக்க முற்பட்ட வேளை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த நபர் தன்னை ஒரு அரசியல்வாதியின் மகனாகவும், கோடீஸ்வரனாகவும் முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தி பல பெண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதனை நம்பி வவுனியாவைச் சேர்ந்த யவதி ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்று குறித்த இளைஞனை சந்தித்த போது அந்த யுவதியிடம் இருந்த நகைகளை புதிதாக்குவதாக ஆசைவார்த்தைகளை கூறி நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு யுவதியை ஏமாற்றி நகைகள் திருடுவதற்காக வவுனியாவுக்கு வந்த வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து யுவதிகளால் பறிகொடுக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதுடன், அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

இதேவேளை, குறித்த நபர் நெல் கொள்வனவு செய்து வரும் தனியார்களிடம் கூடுதலான விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக கூறி மில் உரிமையாளர்களிடம் அழைத்துச் சென்று அவற்றை இறக்கிவிட்டு மில் உரிமையாளர்களிடம் குறைந்த விலையில் பணத்தை பெற்றுக் கொண்டு அவற்றை நெல்லினை கொண்டு வந்தவர்களுக்கு கொடுக்காது தலைமறைவாகியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில், குறித்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்ததுடன் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

N5