செய்திகள்

முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அசமந்தம்: நியமனம் வழங்கமுடியவில்லை என்கிறார் வடக்கு சுகாதார அமைச்சர்

நாம் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அசமந்தமே சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியாமைக்கு காரணம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக பல சுகாதார தொண்டர்கள் சுகாதார தினைக்களத்துடன் இணைந்து மக்களுக்குரிய அத்தியாவசிய சுகாதார சேவையினை வழங்கியது எல்லோரும் அறிந்த விடயம். இச்சுகாதார சேவையில் இருந்தவர்கள் 2014ம் ஆண்டு வந்த 25.01.2014, 25.02.2014 ஆகிய இரண்டு மத்திய அரசின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் ஜனவரி 2015ம் ஆண்டு 900 பேருக்கு சுற்றூழியர்களுக்கான வேலை வழங்கியுள்ளோம்.

அந்த வேலை வாய்ப்பானது மத்திய அரசின் சுற்று நிருபத்தின் பிரகாரம் வேலைக்கு உள்ளீர்க்கப்படும் மொத்த எண்ணிக்கையை வடக்கு மாகாணத்தின் ஆளனியாக மாற்றுவதாக எமக்கு கூறப்பட்டது. தற்போது 900 பேரினை வடக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்ட பின்னர் திறைசேரியின் கீழ் வரும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் சுற்று நிருபத்தில் வந்ததன் அடிப்படையில் பதவி உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களை தொழில் வெற்றிட ஒதுக்கீடு செய்யப்படாமை (காடர்) ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.

தற்போதைய நிலைமையில் ஆளனியாக மாற்றாமல் இருப்பதனால் எமது மாகாணத்தில் இருக்க வேண்டிய சிற்றூழியர்களுக்கு மேலதிகமாக 600 பேர் இருப்பதாக முகாமைத்துவ சேவைகள் தினைக்களத்தின் புள்ளி விபரங்கள் உள்ளது. எனவே 900 பேரினை நாம் உள்ளீர்ப்பு செய்யும் போது ஏற்கனவே தொண்டர்களாக இருந்த இச்சுற்று நிருபத்தின் படி உள்ளீர்ப்பு செய்ய முடியாமல் தவறப்பட்ட 759 சுகாதார தொண்டர்கள் வேறு கால கட்டத்தில் 1 வருடத்தில் இருந்து 10 வருடம் வரையான காலப்பகுதியில் வேலை செய்தவர்கள் உள்ளனர். 180 நாள் தொடர்ச்சியாக வேலைசெய்ததன் திட்டத்தின் அடிப்படையில் இந்த 759 பேரையும் மேலதிகமாக உள்ளீரப்பு செய்ய சொல்லி மத்திய அரசிற்கு வடக்கு மாகாணத்தின் அமைச்சு காரியத்தின் அனுமதி மற்றும் ஆளுனருடைய அனுமதியினை பெற்று முகாமைத்துவ சேவைகள் தினைக்களத்தின் அனுமதி கேட்டு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன் அனுப்பியுள்ளோம். ஆனால் இன்று வரை அதற்கான அனுமதி கிடைக்காமை ஒரு துர்ப்பாக்கிய நிலைமையே.

இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் நல்லாட்சி அரசின் ஜனாதிபதி ஆகியோரிடம் இது தொடர்பாக பல தடவை பேசியுள்ளதோடு இது தொடர்பாக அவர்கள் தங்களது பூரண ஆதரவினை தருவதாக அதற்கான அனுமதியினை தருவதாக கூறிய போதும் இன்று வரை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்மையினால் தான் 759 சுகாதார தொண்டர்களையும் சிற்றூழியர்களாக எமது திணைக்களத்திற்கு உள்ளீரக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.

யுத்தம் நடைபெற்ற போது சுகாதார திணைக்களம் சேவையை வழங்குவதற்கு எம்முடன் இணைந்து தொண்டர்களாக வந்த வேலை செய்தவர்களை அவர்களின் தராதரங்களிற்கு ஏற்ப சிற்றுழியர்களாக சுகாதார சேவை திணைக்களத்திற்குள் உள்ளீர்ப்பு செய்வதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். கடந்த 10 மாதகாலமாக எங்களால் ஆன முயற்சிகளை எடுத்த போதும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்மையினால் தான் எம்மால் உள்ளீர்க்க முடியாமல் போனது. இது தொடர்பாக யாழ் நகரில் நடைபெற்ற எமது அமைச்சினுடைய ஆலோசனை சபையினுடைய கூட்டத்தின் போது அங்கு வருகை தந்த 80 யாழ் மாவட்ட தொண்டர்களிடம் இவ்விடயம் தொடர்பாக பேசி விளக்கமளிக்கப்பட்ட பின்னர் யாழ் மாவட்டத்தில் முதற் கட்டமாக எல்லா சுகாதார தொண்டர்களையும் பிரதிநிதித்துவபடுத்தக் கூடிய ஒரு குழு ஒன்றினை அமைப்பதாக கூறியுள்ளதுடன் அக்குழு எம்முடன் தொடர்பில் இருக்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நேரத்திற்கு நேரம் தெரியப்படுத்துவதாக சொல்லியுள்ளோம்.

அதே நேரத்தில் இது தொடர்பாக வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்துகின்ற எமது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியுள்ளோம் அவர்கள் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர் உடன் கதைத்து சுகாதார தொண்டர்களாக கடைமையாற்றியவர்களை எமது அரச சேவையினுள் சிற்றூழியர்களாக உள்வாங்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 1400 பேரை ஒரே நேரத்தில் சுகாதர சேவைக்குள் எடுப்பதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் எவ்வளவிற்கு எமக்கு அங்கீகாரத்தை தரும் என்கின்ற பிரச்சனை இருப்பதால் இறுதியாக நாங்கள் கேட்டது சுகாதார தொண்டர்களாக கடமையாற்றியவர்கள் சுகாதார அமைச்சினுள் சிற்றூழியர்களாக இல்லாமல் விட்டாலும் வடக்கு மாகாண சபைக்கின் கீழ் வருகின்ற எல்லா திணைக்களங்களினுடைய சிற்றூழியர்களாக முன்னுரிமையின் அடிப்படையில் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம். அந்த வகையில் இச்சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக மாகாண சபை தொடர்ந்து முயற்சி எடுப்பதுடன் அவர்களிற்குரிய நியமனம் வழங்குவதற்கு மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.

N5