செய்திகள்

பதவியேற்ற 10 மாதங்களுக்குள் 111 முறை மோடி வெளிநாடு பயணமானார்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த 10 மாதங்களுக்குள் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 111 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக எம்பி சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கடந்த 10 மாதங்களில் 111 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதில் வெளியுற வுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்தான் அதிகபட்ச பயணங்களை மேற்கொண்டுள்ளார். இத்தனை அதிகமான பயணங்களை அமைச்சர்கள் மேற்கொண்ட போதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள் மட்டுமே இது போன்ற பல்வேறு நாடுகளுக்கான அரசு பூர்வமான பயணங்களை செய்துள்ளனர். இதில் சுஷ்மா 19 பயணங்களும், அவருக்கு அடுத்தபடியாக பிரதமர் மோடி 11 பயணங்களும் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக வி.கே.சிங் 10 பயணங்களை மேற்கொண்டு 3வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு அடுத்த படியாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8, சுற்றுசூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 6, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தலா 5 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த பதிலில் தெரிவித்தார்.