Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாகாண சபை கற்றுத் தந்த பாடங்கள்!

மாகாண சபை கற்றுத் தந்த பாடங்கள்!

நரேன்-

ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி போல நடந்தேறிய மாகாண சபை குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுற்று, மகாணசபை மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் ஒரு சுமுகமான தீர்வு கண்டு அமைச்சர்கள் மாற்றம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஊழல் மற்றும் நிர்வாக மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி முதலமைச்சர் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருந்தது. இது வருதப்பட வேண்டிய விடயம். ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திய விடயம். முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் சரியா, பிழையா என்பதற்கும் அப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இந்த விடயத்தை கையாண்டது அவரது இராஜதந்திரத்தையும், அரசியல் அனுபவத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அமைச்சர்கள் நியமனம் முதல் சபையை வழிநடத்திச் செல்வது வரை அனைத்தையும் முதலமைச்சரின் கைகளில் கொடுத்து விட்டு தனது பொறுப்பை தட்டிக் கழித்து பிரச்சனை என்று வரும் போது தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று கூறியிருப்பது பங்காளிக் கட்சிகள் விமர்சித்ததைப் போன்றே தமிழரசுக் கட்சியின் சர்வதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. முன்னர் ஈபிஆர்எல்எப் கட்சியினர் மட்டுமே தமிழரசுக் கட்சியின் தன்னிச்சைப் போக்கை கடுமையாக விமர்சித்து வந்தனர். தமிழரசுக் கட்சியும், கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியை வழிநடத்துபவரும் முதலமைச்சர் விவகாரத்தில் நடந்து கொண்ட விதம் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியோரையும், மகாணசபை முறைமையை முற்றாக நிராகரித்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை ஓரணியில் திரண்டு மேற்கொள்ள செய்திருந்தது. இந்த பத்தி கடந்தவாரம் சுட்டிகாட்டியதற்கு ஏற்ப தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலருமட் அந்த கட்சியின் தவறான வழிநடத்தலுக்கு எதிராக இவ் அணியில் இணைந்து கொண்டனர். அதுவே நியாயமான நிலைப்பாடாகவும் இருந்தது. மேலும் மக்களின் எண்ணவோட்டமும் அவ்வாறானதாகவே அமைந்திருந்தது. மொத்தத்தில் தாம் அறிமுகப்படுத்திய முதலமைச்சரை தமிழரசுக் கட்சியினர் தாங்களாகவே தூக்கியெறிய முற்பட்டு பின்னர் மக்களாலும், பங்காளிக் கட்சிகளாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலராலும் தமிழரசுக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அவைத்தலைவர் சபையின் மரபையும் மான்பையும் அறியாமல் தானே முன்னின்று முதல்வர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுனரிடம் கையளித்தததன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார். இங்கும் கூட தமிழரசுக் கட்சி தனது கட்சி அங்கத்தவர்களை வழிநடத்த தவறியிருக்கிறது. சட்டவிற்பனர்களும், அரசியல் மான்பு தெரிந்தவர்களும் தலைவர்களாக கொண்டுள்ள தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் நடந்து கொண்ட விதம் அவர்களின் புத்திசாதுரியத்தையும், சட்ட அறிவையும், இராஜதந்திர வல்லமையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள பெரும்பாலனவர்கள் மாகாணசபை முறைக்கு புதியவர்கள். அனுபவமில்லாதர்வர்கள். இதன்காரணமாகவே மாகாண சபையை வழிநடத்துவதற்கு என்று ஒரு குழு நியமிக்கப்படவேண்டும் என்று பஙகாளிக் கட்சியான ஈபிஆர்எல்எப் மாகாணசபை பொறுப்பேற்றவுடனேயே கோரியிருந்தது. பல்வேறு விவாதங்களுக்கு பின்னர் ஒரு வழியாக அந்தக் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்றரை வருடங்களில் ஒரு முறையேனும் அந்தக் குழு கூடவில்லை. தமிழரசுக் கட்சியின் தாளத்திற்கு ஏற்ப குறிப்பாக சம்மந்தரின் விரும்பங்களுக்கு அமைய முதல்வர் விக்கி செயற்பட்ட வரையில் பிரச்சனைகள் எதுவுமில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தலைமை தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட சி.வி தனது பதவியை மக்களுக்காக பயன்படுத்த தொடங்கினார். இது கூட்டமைப்பின் தலைவருக்கும், தமிழரசுக் கட்சிக்கும், அந்தக் கட்சியை வழிநடத்துபவர்களுக்கும், பாரிய தலையிடியாக மாறியது.

தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் சரணாகதி அரசியல் கேள்விக்குள்ளாக்கியது. வடக்கு, கிழக்கில் உள்ள மாகாண சபை உறுப்பினர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், தனது பலமாக கொண்டு இலங்கை அரசாங்கத்துடனும், சர்வதேச சமூகத்துடனும் பேரம் பேசுவதற்கு பதிலாக தரகு அரசியலில் ஈடுபட முனைந்த தலைவர்களின் அணுகுமுறைக்கு முதல்வரின் அணுகுமுறை பெரும் தடையாக இருந்தது. இதன்காரணமாக தக்க தருணத்தை எதிர்பார்த்து இருந்த அந்த தலைவர்கள் ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி முதல்வரை பணிநீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து. இதற்கு அவர்களுக்கு ஒரு பத்திரிகையும் துணை போனது. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தார் முதல்வர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட, ஒரு செய்தித்தாள் மட்டும் முதலமைச்சர் தூக்கியெறியப்பட்டார் என்று செய்தி வெளியிட்டு தனது நன்றி விசுவாசத்தை வெளிக்காட்டியது. ஆனால் இன்றும் விக்கியே முதலமைச்சராகவிருக்கிறார்.

இவைகள் அனைத்துக்கும் மாறாக இளைஞர்கள் மற்றும் மக்களின் எழுச்சி இம்முறை வரலாறு காணாத வகையில் தமிழரசுக் கட்சிக்கு எதிராகவும், கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகவும், முதல்வருக்கு ஆதரவாகவும் திரும்பியது. இந்நிலையானது தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதிகளில் நடைபெற்ற பொது நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள முடியாத நிலமையை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது விலையுயர்ந்த வாகனங்களை குறிப்பிட்ட அந்த நாட்களில் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விட்டிருந்ததாகவும் ஒரு தகவல். ஏற்கனவே பலமுறை இப்பத்தியாளர் சுட்டிக்காட்டியது போலவே மாகாண சபை விடயத்திலும் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறை சரியான நேரத்தில் தவறான அணுமுறையாகவே இருந்தது.

இவ்வளவும் நடந்த பின்னரும் கூட மீண்டும் அமைச்சர்களை நியமிக்கின்ற போது கூட்டமைப்புடன் கலந்துரையாடி அமைச்சர்களை நியமிப்பதற்கு பதிலாக தமிழரசுக் கட்சியுடன் பேசி அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கூறியிருப்பதானது இன்னமும் அவர்கள் ஜனநாயக மான்பை மதிக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

பதவிகளுக்காக இந்த வைராக்கியத்துடன் செயற்படுபவர்கள், தமிழ் தேசிய இனத்தின் உரிமைகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாகவும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி தொடர்பாகவும் இதே வைராக்கியத்துடன் ஏன் செயற்படவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

தமிழரசுக் கட்சி மாகாணசபை தொடர்பில் செயற்படுகின்ற விதமானது அவர்கள் கோரிவருகின்ற இராஜதந்திர நகர்வுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில் மிகவும் எளிமையான முறையில் பரஸ்பர புரிந்துணர்வுடனும், மனம் திறந்த கலந்துரையாடலுடனும் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டிய ஒரு விடயத்தை ஊதிப் பெரிப்பித்து தங்களது கட்சியின் மதிப்பையும் இழக்கச் செய்ததன் மூலம் இவர்களுடைய இராஜதந்திரம் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. ஒட்டுமொதத்தில் வடக்கு மாகாணசபையின் குழப்பங்களில் இருந்து நாம் பின்வரும் விடயங்களை படிப்பினையாக கொள்ள முடியும்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தவுடனேயே கட்சி தலையிட்டு சம்மந்தப்பட்ட அமைச்சர்களை பதவியில் இருந்து விலக்கி மாகாண சபையின் நடவடிக்கைகளை நேர்மையாகவும், தடையின்றியும் செயற்படுவதற்கு வழிவகுத்திருக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் தவறான அணுகுமுறையானது பங்காளிக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் திரட்டி நீதியின் பக்கம் நிற்கச் செய்திருக்கிறது. இதன்மூலம் தமிழரசுக் கட்சியின் ஏதேச்சதிகார போக்கிற்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

அரசியலில் தொடர்ந்தும் இருப்பதா..?, வேண்டாமா..?, இருந்தால் யாருடன் இருப்பது என்று தடுமாறிக கொண்டிருந்த முதல்வரை தமிழ் மக்களின் நலன்சார்ந்து அவர்களது அபிலாசைகள் நிறைவேறும் வரை அரசியலில் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், தமிழரசுக் கட்சியின் ஏகபோகத்துவத்திற்கு எதிராக ஒரு கூட்டு தலைமையின் தலைமைப் பொறுப்பேற்று ஜனநாயக மயப்படுத்தலின் ஊடாக பொறுப்பு கூறும் அரசியலில் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், ஒரு மாற்றுத் தலைமைக்கான தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

1970களின் தொடக்கத்தில் இருந்து அன்றைய இளைஞர்கள் எந்த மிதவாதிகளுக்கு எதிராக ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க எண்ணிணார்களோ அதே மனநிலையில் இன்றைய இளைஞர்களும், தமிழ் மக்களும் தாங்கள் பெரிதும் நம்பியிருந்த கூட்டமைப்பின் தலைவரிடத்தில் இருந்த நம்பிக்கையை இழந்து முதலமைச்சரின் மீது நம்பிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு ஆதரவான மக்கள் எழுச்சி வெளிப்படுத்தியிருக்கிறது.

தனிமனித வழிபாடு ஆபத்தானது என்பதற்காகவே இப்பத்தி முதல்வர் கூட்டு தலைமையின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *