செய்திகள்

முதலமைச்சருடனான முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்: யாழில் ரணிலுக்கு அழுத்தம்

வடமாகணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொண்டு, அவருடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என சிவில் அமைப்புக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடமிருந்து கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.

பிரதமரின் விஜயம் குறித்து அவரது அலுவலகத்திலிருந்து முதலமைச்சருக்கு எந்தவிதமான அழைப்பும் அனுப்பப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க பங்குகொள்ளும் நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. ரணில் கலந்துகொண்ட பொது வைபவங்களில் இது பாரிய குறைபாடாக காணப்பட்டது.

அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இந்த நிகழ்வுகளில் பங்குகொண்ட போதிலும், யாழ். மாவட்ட எம்.பி. சிவஞானம் சிறிதரன் இவற்றைப் புறக்கணித்ததுடன், அது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட பைவங்கள் பலவற்றிலும், விக்கினேஸ்வரனுடன் முரண்பட வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஐ.தே.க.வுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவருக்கு எடுத்துக்கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், இருவரையும் சந்திக்கவைப்பதற்கான முயற்சிகளில் சில முக்கியஸ்த்தர்கள் இறங்கியிருப்பதாகவும் தெரிகின்றது. நாளையும் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருப்பார் என்பதால், நாளைய தினம் சந்திப்பு ஒன்றுகான ஏற்பாடுகள் செய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது.