செய்திகள்

முதலமைச்சரையும் எங்களையும் எவராலும் பிரிக்கமுடியாது: மாவையின் முன்முயற்சிக்கு சிறிதரன் பாராட்டு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டத்தினைக் கூட்டி வடமாகாணத்தைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாணசபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் சேர்ந்து இயங்க கூடிய வலுவான கட்டடமைப்பு ஒன்றினை தற்போது உருவாக்க முன்வந்துள்ள எமது தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்; என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

எப்போதும் எந்த வேளையிலும் அனைத்து விடயங்களிலும் வடமாகாண முதலமைச்சருடன் சேர்ந்து இயங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு என்றும் பக்கபலமாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ள சிறீதரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் எந்தவொரு பிளவும் இல்லையெனவும் தமிழரசுக் கட்சியினர் வடமாகாண முதலமைச்சருடன் புரிந்துணர்வு அடிப்படையிலும் வலுவான ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகிறார்கள் எனவும் முதலமைச்சரையும் எங்களையும் எவராலும் பிரிக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எமக்கும் எமது மக்களுக்கும் கிடைத்த பெரும் சொத்தாகும். வெளிப்படைத் தன்மையுடனும் யாருக்கும் அஞ்சாது தமிழ்த்தேசியத்தின் கொள்கைகளை எங்கேயும் எவ்வேளையிலும் ஆணித்தரமாக தெரிவிக்கக் கூடியவர் என்பதை அனைவரும் அறிவர்.

அந்த வகையிலே வடமாகாணசபையை புறக்கணித்துவிட்டு வடக்கின் அபிவிருத்திக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாகத் தெற்கிற்கு அழைத்து பாரிய நிதியுதவி வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாது எனவும் இது கூட்டமைப்புக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் செயல் என்பதையும் முதலமைச்சர் ஆணித்தரமாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.

இதைவிட அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது, அவர்கள் அதை சட்டைப்பையில் (பொக்கற்) போட்டுவிட்டார்கள் என தெரிவித்திருக்கவில்லை. இணையத்தளங்களில் வரும் செய்திகளையும் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களையும் தொடர்புபடுத்தி மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு சிலர் மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க முனைந்துள்ளார்கள். ஆனால் முதலமைச்சரைப் பற்றி நாமும் எமது மக்களும் நன்கு அறிவோம்.

முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கூறிய கருத்துக் குறித்து தமிழ்ப்பத்திரிகை ஒன்றில் அண்மையில் செய்தி பிரசுரமாகி இருந்ததை யாவரும் அறிவர். அது தொடர்பில், நான் தனிப்பட்ட முறையில் தெற்கிற்கு சென்று அரசாங்கத்திடம் இருந்து அபிவிருத்திக்கென எந்த நிதியினையும் பெறவில்லை என்பதை எமது மக்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.