செய்திகள்

முதலமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்த பன்னீர்ச்செல்வம்

தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை, கவர்னர் ரோசய்யாவிடம் அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா மற்றும் 3 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி விடுவித்தது. இதையடுத்து, முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு ஏற்பட்டிருந்த தடை நீங்கியது.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (22 ஆம் தேதி) காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 10 நிமிடங்களே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்து அதற்கான கடிதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டார்கள்.

இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய 5 அ.தி.மு.க. அமைச்சர்கள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி ஜெயலலிதாவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், கடந்த 7 மாதங்களாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 8 மணியளவில் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். அப்போது, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார்.

பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்ற கவர்னர், தமிழக அமைச்சரவையை விரைவில் அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புதிய அமைச்சரவை பட்டியலை அளிக்குமாறும் கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.