செய்திகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார் பிரித்தாய அமைச்சர்: வடக்கு நிலை பற்றி ஆராய்வு

மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் இன்று யாழ்ப்பாணத்துக்கு சென்று வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அத்துடன் வடபகுதி நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் இலங்கைக்கான பிரிட்டன் தூதர் ஜோன்ரன்கினும் கூட வந்திருந்தார். இங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரிட்டிஷ் கல்லூரிக்குச் சென்று ஆங்கில மொழி கற்கைகள் குறித்தும் அவர் ஆராய்வார்.

யாழ். நூலகத்துக்குச் செல்லும் அமைச்சர் அங்கு நூல்களைக் கையளிப்பார். முகமாலை மற்றும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் ஆகியவற்றுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை அவதானிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.