செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றிக்கு 308 ரன்கள் இலக்கு வைத்த வங்காளதேசம்

இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் பகல்- இரவு ஆட்டமான நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது வங்காள தேசம். அந்த அணியில் லித்தோன் தாஸ், முஸ்டாபிகுர் ரஹ்மான் ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய தமீம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். இதனால் ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த அணி 6.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். சவுமியா சர்கார் 40 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து அறிமுக வீரர் தாஸ் 3-வது நபராக களம் இறங்கினார்.

வங்காள தேசம் அணி 15.4 ஓவரில் 119 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தமீம் இக்பால் 57 ரன்னுடனும், தாஸ் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பின்னர் மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
அதுவரை பேட்டிங்குக்கு ஒத்துழைத்த பிட்ச், பின்னர் பந்துவீச்சுக்கு ஆதரவாக மாறியது. தொடர்ந்து விளையாடிய தமீம் இக்பால் மேலும் 3 ரன்கள் எடுத்த நிலையில் 60 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து முஸ்பிகுர் ரஹிம் களம் இறங்கினார். இவர் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு சாஹிப் அல் ஹசன், சபீர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை திறமையான எதிர்கொண்டு விளையாடியது. ரஹ்மான் 41 ரன்னிலும், சாஹிப் அல் ஹசன் 52 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அதன்பின் வந்த நசீர் ஹொசைன் 34 ரன்களும், கேப்டன் மோர்தசா 21 ரன்களும் சேர்க்க, வங்காள தேசம் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்