முன்னாள் விடுதலைப்புலி போராளி மகசீன் சிறையில் மரணம்
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியான முன்னாள் போராளி ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். மகசின் சிறைச்சாலைக் கைதியான கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் (வயது 36) என்னும் முன்னாள் போராளியே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் குளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி விழுந்த போதிலும் இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே இவரை வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று கொழும்பு போதனாவைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலையில் உயிரிழந்த நான்காவது அரசியற் சிறைக்கைதி இவராவார்.
சிறை அதிகாரிகளின் அசமந்த போக்கே இம்முன்னாள் போராளியின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது எனவும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட கைதிகளுக்கு வழங்கும் சலுகைள், முன்னாள் போராளிகளுக்கு சிறை அதிகாரிகளால் வழங்கப்படுவதில்லையெனவும் ஏனைய அரசியற் கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.