செய்திகள்

முன்னைய அரசின் ஊழல்களை கண்டறிய புதிய விசாரணைக்குழு: ரணில் தலைவராக நியமனம்

மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசில் இடம்பெற்ற பெரும் ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பர் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ரணில் தலைமையிலான இந்தக் குழுவில் மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, இரா.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி வெலியமுன, மலிக் சமரவிக்ரம ஆகியோர் அடங்குவர்.

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் குழுவின் இணைப்பாளராகச் செயற்படுவார் என்றும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார். முன்னைய அரசின் ஒப்பந்தங்கள், செயற்பாடுகளை விசாரிப்பதற்கான அதிகாரம் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.