செய்திகள்

முப்படைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தமிழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: டக்ளஸ்

முப்படைகளுக்கு பொலிசாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக 2015.02.02 ம் திகதியைக் கொண்ட வர்த்தமானியில் அறிவித்தல் வெளியாகியுள்ளது. இது தமிழ் பேசும் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், இந்நாட்டில் வடக்கு மற்றும் தென்பகுதி மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறியிருக்கின்றார். ஜனாதிபதி அவர்களின் இக்கருத்தை ஈ.பி.டி.பியினராகிய நாம் வரவேற்றிருந்தோம். இந்நிலையில், முப்படைகளுக்கு பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் நடவடிக்கையானது எமது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதால் தேசிய நல்லிணக்கம் குறித்து கேள்விகள் எழுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் தெரிவித்திருப்பதாவது:

இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் அகன்று, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்குக் கரம் கொடுத்தே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஆரம்பந்தொட்டே வலியுறுத்தி வருகின்றோம்.

சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் நாம் சுமுகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னெடுத்திருந்தோம். இதன்பிரகாரம் சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீடுகளைப் படிப்படியாக குறைத்து, இறுதியில் முற்றாக அதனை அகற்றும் நிலையை உருவாக்கி வந்திருந்தோம்.

இந்நிலையில், தமிழ் பேசும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நோக்கிப் படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், பொலிசாருக்கு உரிய அதிகாரங்கள் முப்படைகளுக்கும் வழங்கியிருப்பதானது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

எனவே, தேசிய நல்லிணக்கத்தின்பால் தமிழ் பேசும் மக்களும் சுயமாக ஈர்க்கப்படக் கூடியதான முயற்சிகளையே அரசு மேற்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ் பேசும் மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும், பீதியையும் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.