செய்திகள்

மும்பையில், நாளை ஐ.பி.எல். தொடக்க விழா: கத்ரினா கைப், ஜாக்குலின் நடனம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து வருடம் தோறும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான 9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற 9–ந்தேதி முதல் மே மாதம் 29–ந்தேதி வரை நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா மும்பை வொர்லியில் உள்ள நேசனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை)இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. தொடக்க விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க பாப் பாடகர் கிறிஸ் பிரவுன் தொடக்க விழாவில் பாடுகிறார். பிரபலமான ‘லாயல்’, ‘வித்யூ’ போன்ற பாடல்களை அவர் தனது குழுவுடன் இணைந்து பாடி மேடையில் அசத்துகிறார். கிறிஸ் பிரவுன் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். மேஜர் லேசரின் நடனக்குழுவும் தொடக்க விழாவில் அசத்த இருக்கிறது.

பாலிவுட் பிரபலங்களான ரன்வீர்சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ், கத்ரினா கயூப், யோயோ ஹனிசிங் ஆகியோரது நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடக்க விழா இறுதியில் 8 அணிகளின் கேப்டன்கள் உறுதி மொழி எடுப்பார்கள்.

சோனி மேக்ஸ், சோனி செட் மேக்ஸ் டெலிவிசனில் ஐ.பி.எல். தொடக்க விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 32 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு இருக்கும்.

9–ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்– ரைசிங் புனே அணிகள் மோதுகின்றன.