செய்திகள்

மும்பையை வீழ்த்தி டெல்லி அணி அசத்தல் வெற்றி

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பையை 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியதுஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி டேர்டெவில்ஸ் வீழ்த்தியது.

ஐ.பி.எல். சீசனின் 17-வது லீக் போட்டி இன்று மதியம் 4 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியின் டி காக் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெங்களூர் அணிக்கெதிராக சதம் விளாசிய டி காக் இந்த போட்டியில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் அய்யர் 20 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 48 பந்தில் 60 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

47623(1)
ஐந்தாவது வீரராக களம் இறங்கிய டுமினி அவுட்டாகாமல் 31 பந்தில் 49 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினார்கள். பார்த்தீவ் பட்டேல் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த அம்பதி ராயுடு 25 ரன்கள் சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் குர்னால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். குர்னால் பாண்டியா அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்தில் 36 ரன்கள் சேர்த்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

அதன்பின் வந்த பட்லர் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுமுனையில் சர்மா அரைசதம் அடித்தார். இருந்தாலும் டெல்லி அணியினர் தங்களது சுழற்பந்து வீச்சால் மும்பை பேட்டிங் பலத்தை கிடுகிடுக்க வைத்தனர். மிஸ்ரா 4 ஓவரில் 24 ரன்கள் கொடுது்து 2 விக்கெட் வீழ்த்தினார். இம்ரான தஹிர் 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதனால் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் மும்பை அணி 10 ரன்கள் சேர்த்தது. கடைசி இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை ஜாகீர்கான் வீசினார். இந்த ஓவரில் மும்பை ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஒவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா அடுத்த பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை அணி தோல்வி உறுதியானது. ரோகித் சர்மா 48 பந்தில் 65 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து வந்த ஹர்பஜன் சிங் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்கள் எடுக்க மும்பை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

47592(1)