செய்திகள்

மும்பை விமான நிலையம் தாக்கப்படும்: ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஜனவரி 10 ஆம் தேதி தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள கழிவறையில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் 10ஆம் தேதி தாக்குதல் நடத்தப்படும்’ என எழுதப்பட்டுள்ளது.

இந்த கழிவறையை இன்று முதலாவதாக சுத்தம் செய்ய சென்றவரால் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். கழிவறைக்கு வெளியே உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், மும்பை காவல்துறையும் விசாரணை நடத்த உள்ளது.

குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு தகர்க்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தும் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.