செய்திகள்

முருகதாஸ் படத்தில் பொலிஸ் கதாபாத்திரத்தில் ராய் லட்சுமி

கத்தி படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் யாரை இயக்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவேளையில் சத்தமில்லாமல் ஹிந்திப் படத்தை இயக்கச் சென்றுவிட்டார்.

தற்போது சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக்கி ஹிந்தியில் அகிரா என்கிற படமொன்றை இயக்கி வருகிறார். இது தமிழில் வந்த ‘மெளன குரு’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் போல அல்லாமல், நாயகியை மையமாக வைத்து திரைக்கதையை முருகதாஸ் மாற்றியுள்ளார்.

மேலும் படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை சத்ருகன் சின்ஹா, ராய் லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராய் லட்சுமி நடித்து வருகிறார்.

மௌனகுரு படத்தில் உமா ரியாஸ் நடித்த பெண் போலீஸ் வேடம், ஒரு முக்கியமான கதாபாத்திரம். அந்த வேடத்தில் தான் ஹிந்தியில் ராய் லட்சுமி நடிக்கிறார். ராய் லட்சுமி நடிக்கும் முதல் ஹிந்திப் படம் இது. கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கிய அகிரா படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.