செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கடற்றொழில் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வற்கு, சுமார் 100 மில்லியன் ரூபாய்களை பயன்படுத்த முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர், மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புக்களையும் சந்தித்து மாவட்டத்தின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

வடக்கு- கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான தரமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு புலம்பெயர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில்சார் அபிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடியவாறு சுமார் 100 மில்லியன் ரூபாய்களை கொடையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடந்த காலத்தைப் போன்று இல்லாமல் சரியான தரப்புக்களை இனங்கண்டு செயற்படுவார்களாயின், குறித்த தனியார் பங்களிப்புக்களையும் அதேபோன்று அரசாங்க திட்டங்களையும் ஒருமுகப்படுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கடற்றொழில் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக கடற்றொழில் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மீன்பிடிச் செயற்பாடுகளை சட்ட விதி முறைகளுக்கு அமைய ஒழுங்குபடுத்துவதுடன், அதிகளவான வருமானத்தை தரக்கூடிய தொழில் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கடற்றொழில் சமூகத்தினருக்கு சிறந்த வாழ்கை தரத்தினை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அத்துடன் கடற்றொழிலாளர்களுக்கு கௌரவமான வாழ்கைத் தரத்தினை ஏற்படுத்துவதற்கு நிறைவான வருமான மார்க்கங்களை அதிகரிக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் இன்று சனிக்கிழமை நடத்திய கலந்துரையாடலில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)