செய்திகள்

முல்லை பொன்னகர் வீதியை புனரமைக்க கோரிக்கை

முல்லைத்தீவு முள்ளியவளை பொன்னகர் வீதி புனரமைக்கப்படாமையினால் இதனூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறித்த வீதியை புனரமைத்து தருமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்ற பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் கிராமத்திற்கான பிரதான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்;படாத நிலையில் இதனூடாக பயணிக்கும் மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதாவது முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் தற்போது 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்த கிராம மக்கள்தமது அடிப்படைத்தேவைகளான வைத்தியசேவை,சந்தைவசதி ஏனைய அடிப்படை வசதிகளை வேறு இடங்களில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இவ்வீதியூடாகவே பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதே வேளை இக்கிராமத்தில் உள்ள பாடசாலை தரம் -5வரையான வகுப்புக்களை கொண்டு காணப்;படுவதுடன் தற்போது நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இதனைவிட 75 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்விக்காக முள்ளியவளை நகரில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வீதியூடாகவே தினமும் பயணித்து வருகின்றனர்.

இவ்வாறு குறித்த வீதி புனரமைக்கப்படாமல் குன்றும்குழியுமாக காணப்படுவதனால் இதனூடாக தினமும் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் குறித்த வீதியை புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.