செய்திகள்

முள்ளிவாய்க்கால் அவலம்… பத்தாண்டுகால படிப்பினைகள்!

யதீந்திரா
இன்றும் நினைவுகள் ஈரமாகவே இருக்கின்றன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மட்டுமல்லாது தெற்காசிய இராணுவ வலுச்சமநிலையிலும் தாக்கம் செலுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009 மேயில் பேரழிவுகளுடன் தோற்கடிக்கப்பட்டது. பெருத்தொகையான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பத்தாண்டுகளை நினைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இலங்கைத் தீவு மீண்டுமொரு இரத்த வரலாற்றுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. மீண்டும் இலங்கையின் அரசியல் வரலாறு கரடு முரடான பாதை ஒன்றை எதிர்வு கூறி நிற்கிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கழிந்து சென்ற ஒரு தசாப்த காலத்தின் அரசியல் நகர்வுகளை இப்பத்தி ஆராய முற்படுகிறது. உண்மையில் இது ஒரு நீண்ட ஆய்வுக்குரியது.

2009இற்கு பின்னரான அரசியல் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது? நடந்தவைகள் என்ன? எவ்வாறு நடந்திருக்க வேண்டும்? ஒரு பேரவலத்தின் பின்னரான அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் அதனை எவ்வாறு கையாண்டனர்? அவர்கள் எவ்வாறு கையாண்டிருக்க வேண்டும்? 2009இற்கு பின்னரான சர்வதேச அரசியல் பரிமானம் எவ்வாறு விளங்கிக்கொள்ளப்பட்டது? அது எவ்வாறு விளங்கிக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்? 2009இற்கு பின்னரான புலம்பெயர் செயற்பாடுகள் எவ்வாறிருந்தன? அது எவ்வாறிருந்திருக்க வேண்டும்? புலம்பெயர் சமூகத்தை கையாளக் கூடிய வல்லமையுடன் களத்தில் தமிழ் தலைமைகள் இருந்தனவா? 2009 இற்கு பின்னரான ஒரு தசாப்தகால அரசியலுக்கு தலைமை தாங்கிய மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் காலப்பொருத்தம் கருதிய தலைமை ஒன்றை வழங்கியிருந்தாரா? இல்லை என்றால் – ஏன் அவரால் அவ்வாறானதொரு தலைமையை வழங்க முடியாமல் போனது? சம்பந்தனை தவறு என்று நிரூபிக்க முற்பட்டவர்கள் அதனை சரியாக கையாண்டனரா? தங்களை ஒரு மாற்றுத் தலைமையாக கருதிக் கொண்டு செயலாற்றியவர்கள் உண்மையிலேயே ஒரு மாற்றுத்தானா? அவர்களால் ஏன் இன்றுவரை ஒரு சரியான மாற்றாக தங்களை நிறுவ முடியாமல் போனது?

Mulliwaikkal 2019

இவ்வாறான பல கேள்விகளுக்கான விடைகளை நாம் காணவேண்டும். அந்த விடைகளே, மேலே குறிப்பிட்டவாறான நீண்ட ஆய்வு ஒன்றை செய்ய உதவும். ஆனால் அதற்கு அதிகம் மனம்திறந்து உரையாட வேண்டும். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், அவ்வாறான மனம் திறந்த உரையாடல்களுக்கான சாத்தியப்பாடுகள் எப்போதுமே கேள்விக்குறிதான். 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவரீதியில் மௌனிக்கப்பட்ட பின்னர், கடந்த ஒரு தசாப்த கால தமிழ் அரசியல் இயங்குதளத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கட்டுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நோக்கினால் கடந்த ஒரு தசாப்தகால அரசியல் நகர்வுகள் தொடர்பான விமர்சனம் என்பது அதிகம் கூட்டமைப்பை நோக்கி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றே! அதற்காக ஏனையவர்கள் விமர்சனத்திற்குள் அடங்கவில்லை என்பது பொருளல்ல. கூட்டமைப்பு தவறு செய்கிறதென்றால் அதனை அம்பலப்படுத்தி, மக்களை சரியான வழிநோக்கி நகர்த்த முடியாமல் போனமைக்கான பொறுப்பு யாருடையது?

கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ராஜதந்திர போராட்டம் என்றும், ஜெனிவாவின் ஊடான அழுத்தங்கள் என்றும், நல்லிணக்க பொறிமுறை என்றும், அரசியல் தீர்வு என்றும் புதிய அரசியல் யாப்புக்கான முயற்சி என்றெல்லாம் கூறப்பட்டன. ஆனால் இன்று தமிழர் சமூகம் வந்து நிற்கும் இடத்திலி;ருந்து சிந்தித்தால், மேற்படி முயற்சிகளின் மூலம் தமிழர் சமூகம் அடைந்த நன்மை என்ன என்னும் கேள்வி துருத்திக்கொண்டு மேலெழுகிறது. ராஜபக்சவுடன் பேசிப் பயனில்லை எனவே ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதன் மூலம்தான் ஒரு அரசியல் தீர்வை நோக்கிப் பயணிக்க முடியுமென்று சம்பந்தன் தரப்பு வாதிட்டது. அப்போது எழுத்து மூல உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தாமல் இவ்வாறு வெள்ளைத் தாளில் கையெழுத்திடுவது சரியானதா? – என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு சொல்லப்பட்ட பதில் – முன்னர் எழுத்து மூல உடன்பாடு செய்யப்பட்ட விடயங்கள் நிகழ்ந்தனவா – இல்லையே – எனவே இந்த சந்தர்ப்பத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் பயணிப்போம். இவ்வாறு சம்பந்தன் தரப்பு கூறிய போது – சந்திரிக்கா குமாரதுங்கவே – மிஸ்டர் சம்பந்தன் இப்போதும் எங்களை நம்புகின்றீர்களா ? – என்று ஆச்சரியமாக கேட்டதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. தங்களை உடன்பாடின்றி நம்புவதை சந்திரிக்காவினாலேயே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. இன்று அந்த நம்பிக்கையும் தோற்றுவிட்டது. ஒரு வேளை எழுத்து மூல உடன்பாடு இருந்திருந்தால் – ரணில்-மைத்திரி கூட்டரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது என்றாவது கூறலாம் ஆனால் அதுவும் தற்போது இல்லை.

Mulliwaikkal 2019 4

கடந்த நான்கு வருடங்களில் எந்த அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு அதீத நம்பிக்கையை காண்பித்து வந்ததோ அந்த அரசாங்கமோ தனது படுமோசமான தோல்வியை பதிவு செய்திருக்கிறது. இன்று இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அதன் மோசமான தோல்வியின் வெளிப்பாடுகள்தான். இது அரசாங்கத்தின் தோல்வி மட்டும்தானா? இதனை தமிழ் அரசியல் நோக்கில் கூறுவதாயின், இது கூட்டமைப்பின் படு மோசமான தோல்வி. அதன் தலைவராக வலம் வந்து கொண்டிருக்கும் இரா.சம்பந்தனின் படு மோசமான தோல்வி. அரசியல் வேறு சட்டம் வேறு என்பதை பிரித்தறியத் தெரியாது, எதேச்சாதிகாரமாகவும் தான்தோன்றித் தனமாகவும் செயற்பட்ட எம்.ஏ.சுமந்திரனின் படுமோசமான தோல்வி. சம்பந்தனும் சுமந்திரனும் தவறான பாதையில் செல்கின்றனர் என்பதை தெரிந்தும் அவர்களை தடுத்து நிறுத்தும் வல்லமையில்லாமல் இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தோல்வி.

தமிழரசு கட்சி தவறான பாதையில் பயணிக்கிறது என்பதை தெரிந்தும் தங்களின் அரசியல் இருப்புக்களுக்காக அவர்களின் பின்னால் இழுபட்டுச் சென்றுகொண்டிருந்த பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டின் தோல்வி. கூட்டமைப்பு தவறான பாதையில் பயணிக்கிறது என்பதை தெரிந்து கொண்டும் இன்றுவரை தங்களை ஒரு வலுவான மாற்றுத் தலைமையாக நிறுவ முடியாமல் இருக்கின்ற விக்கினேஸ்வரனதும், சுரேஸ் பிரேமச்சந்திரனதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் தோல்வி. கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு அரசியல் வெளியை உருவாக்கப் போவதான கதைகளைச் சொல்லி, அரசியல் அரங்கிற்குள் தலையிட்ட, தமிழ் மக்கள் பேரவைகளினதும், தமிழ் சிவில் சமூகங்களினதும் மோசமான தோல்வி. விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு வலுவான மாற்றும் தலைமை உருவாகும் என்னும் நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்துக் கொண்டிருந்த கருத்துருவாக்கிகளின் தோல்வி.

இந்த பின்புலத்தில் நோக்கினால், கடந்த பத்தாண்டுகால அரசியல் நகர்வுகள் அனைத்துமே படு தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. முக்கியமாக ஆட்சி மாற்றம் மக்களுக்கு அரசியல் அட்சய பாத்திரத்தை வழங்குமென்று கூறிய சம்பந்தனின் கூட்டமைப்பு படு மோசமான தோல்வியின் அடையாளமாக இருக்கிறது. மறுபுறமாக சர்வதேச அரசியல் அரங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுடிமென்று கூறிக் கொண்டிருந்த தமிழ் புலம்பெயர் சமூகத்தின் அனைத்து செயற்பாடுகளுமே தோல்வியில்தான் முடிந்திருக்கின்றது. இது எவர் மீதுமான குற்றச்சாட்டு அல்ல, மாறாக நாம் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது, இவ்வாறான விடயங்கள்தான் கண்களில் தென்படுகின்றது. இல்லை – நாங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று எவரேனும் வாதிடுவார்களாயின் அதனையும் அவர்கள் பொது வெளியில் உரையாடலாம். இந்தப் பத்தி, பத்தாண்டுகளுக்கு பின்னராவது அவ்வாறானதொரு உரையாடல் அவசியம் என்பதைத்தான் வலியுறுத்துகின்றது.

Mullivaikkal 2019 (26)

அரசியல் தொடர்பில் ஒரு கூற்றுண்டு. அதாவது, அரசியல் என்பது சாத்தியங்களை கையாளும் கலை. இதனடிப்படையில் அரசியலில் எது சரி அல்லது எது பிழை என்பதல்ல முக்கியமானது – எந்தச் சூழலில் எது சரியானது என்பதுதான் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட சூழலில் சாத்தியமானதை விட்டுவிட்டு, சாத்தியமற்றதை கனவு காணும் போது, இறுதியில் இரண்டையுமே இழக்க நேரிடுகின்றது. கடந்த பத்தாண்டு கால அரசியல் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போன இடமும் இதுதான். தமிழர் தரப்பின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன என்பதுதான், முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னரான கடந்த பத்தாண்டுகால படிப்பினைகளாகும். இந்தப் படிப்பினையிலிருந்து கற்றுக் கொள்ள மறுத்தால், இனிவரப் போகும் காலமும் அரசியல் தோல்விகளின் காலமாகத்தான் நீளும்.