செய்திகள்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு

அஞ்சல் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கீழ் இயங்கிவரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் சனிக்கிழமை (23) மட்டக்களப்பு-காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டப வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய புதிய அலுவலகத்தை அஞ்சல் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி, பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து திறந்து வைத்தார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.ஸமீல் நளீமி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபா உட்பட காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபாவினால் அஞ்சல் மற்றும் அஞ்சல் விவகார முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை காத்தான்குடி பிரதேசத்தில் திறந்து வைத்தமைக்காக கிழக்கு மாகாண இளைஞர்கள் சார்பில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸானினால் வழங்கி வைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் ஹலீமுக்கு வழங்கி வைத்தார்.

குறித்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் கடந்த அரசாங்க காலத்தில் தற்காலிகமாக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அப்போதய பிரதமர் தி.மு.ஜயரட்னவினால் திறந்து வைக்கப்பட்டு பின்னர் தற்போது காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டப வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

n10