செய்திகள்

முஸ்லிம் தரப்புகளுடன் வியாழனன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் வியாழக்கிழமை முஸ்லிம் தரப்புகளுடன் சந்திப்பொன்றை நடத்தவிருக்கின்றார். நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் பிற்பகல் 3 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவிருப்பதாக மகிந்த ராஜபக்ஷ ஆதரவுத் தரப்பின் முக்கியஸ்தரான குருணாகல் மாநகரசபை உறுப்பினர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னணி தொடர்பாக ஆராய்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு உலமாக்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுடன் முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட சுமார் 200 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மறைமுகமாகச் செயற்பட்ட பொதுபலசேனாவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தூண்டிவிட்டதாக இப்போது பொதுபலசேனாமீது குற்றம் சுமத்தப்படுகின்றது. பொதுபலசேனா சர்வதேசத்தின் கூலிப்படையென அண்மையில் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு சில இரகசியங்களை வெளியிடவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறெனினும் தனது பதவிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டுகொள்ளாத முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்த அழைப்பை புத்திஜீவிகளும், முக்கிய முஸ்லிம் தரப்புகளும் நிராகரித்திருப்பதாகவும், தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது மீண்டும் அரசியல் பிரவேசத்துக்குத் தயாராகிவரும் மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களின் ஆதரவைத்திரட்டும் கபட நாடகமே இச்சந்திப்பு என முஸ்லிம் தரப்பில் பலரும் தெரிவித்துள்ளனர்.