செய்திகள்

மு.கா.வில் போட்டியிடுவதா என்பதையிட்டு முடிவில்லை: பல கதவுகள் திறந்துள்ளன: பஷீர்

நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதா அல்லது, மாற்றுத்  தெரிவு ஒன்றை மேற்கொள்வதா என்பதையிட்டு தான், இறுதி வேளையிலேயே தீர்மானிக்கப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் ஷேகுதாவுத் தெரிவித்திருக்கின்றார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், உங்களுடைய நிலைப்பாடு என்ன எனக் கேட்டபோதே பஷீர் இவ்வாறு தெரிவித்தார்.

தன்னுடைய தனிப்பட்ட அரசியல் தொடர்பில் இதுவரையில் தான் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு 24 மணிநேரம் இருக்கும் நிலையிலேயே தன்னுடைய முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகள், தேர்தலுக்காக வகுக்கப்படவேண்டிய  வியூகம் என்பன தொடர்பில் கடசித் தலைமையுடனும், கட்சி உயர் பீடத்திலும் தான் பேசவுள்ளதாகவும் தெரிவித்த பஷீர் தன்னுடைய வியூகத்தை கட்சி ஏற்றுக்கொண்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடப் போவதாகச் சொன்னார். இல்லையெனில் மாற்றுவழிகளையே தான் நாடிச் செல்லவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உங்களுடைய மாற்றுவழிதான் என்ன’ எனக் கேட்டபோது, “எனக்காக பல கதவுகள் திறந்தேயுள்ளன” எனத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தனக்கு பிரச்சினை எதுவும் இல்லை எனத் தெரிவித்த பஷீர், கட்சியின் தலைமையிலுள்ள சிலரின் பிற்போக்குத் தனத்தினால்தான் தனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

“என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய முதலாவது தெரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். ஆனால், அதன்  தலைமையுடனான அணுகுமுறையுடன் முரண்பட்டால் மாற்றுவழிகளையிட்டு நான் தீர்மானிப்பது தவிர்க்கமுடியாது’ எனவும் கஷீர் நேற்று ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.