செய்திகள்

மு.கா. வெளியேறியதால் அரசுக்கான ஆதரவு தெற்கில் அதிகரிப்பு: அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறியதால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பதிலாக அரசுக்கான ஆதரவே இதன் மூலம் அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை பிரதேச மக்கள் சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை கல்முனை சுப்பஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

“சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் ,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சட்டத்தரணி பஹீஜ் ஆகியோருடன் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் உரையாற்றுகையில் ; “கடந்த 2005 ஆம் ஆண்டிலும், 2010 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் எம்மோடு இருக்கவில்லை. ஆனாலும் எமது ஜனாதிபதி மேலதிகப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.

எமது ஜனாதிபதியின் பதவிக்காலம்நிறைவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு வருடமும் ஜனாதிபதி பதவியில் இருந்திருந்தால் யாரும் எம்மைவிட்டுப் போயிருக்க மாட்டார்கள். இவர்கள் வெளியேறியதன் காரணமாக தென்மாகாணத்திலே எமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

இதேவேளை வன்னி மாவட்டத்திலே ரிஷாத் பதியுதீனுக்கு இருக்கின்ற முஸ்லிம் வாக்குகள் மொத்தம் 18,000 மட்டுமே. இந்த வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்துதான் எடுக்க வேண்டும். இதே போன்று வாழைச்சேனை, ஓட்டமாவடி,கல்குடா போன்ற பிரதேசங்களிலே சுமார் 30 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த வாக்கு களையும் அமீரலியும் முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்தே பெறவேண்டும்.

இப்போது எமது பிரதேசங்களிலே ஐக்கிய தேசியக் கட்சிக்காரர் எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருக்கின்றனர். அன்று சரத் பொன்சேகாவுக்கு வேலை செய்தவர்கள் இன்று இல்லை. மைத்திரிபால சிறிசேன தனிமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்.

ஆனால் எப்போதும் எம்முடன் இருக்கின்ற ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாஉல்லா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் இப்போதும் எம்முடனேயே இருக்கின்றார்கள். எனவே எமது ஜனாதிபதியின் வெற்றி உறுதியானது. மேலதிகப் பெரும்பான்மை வாக்குகளால் அவர் வெற்றி பெறுவார்” என்றார்.