செய்திகள்

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு உத்தரவு

மூத்த குடிமக்களை பாதுகாக்க, எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான அஷ்வனி குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: நாட்டில், மூத்த குடிமக்களின் நலனுக்காக, ஆறு சட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த சட்டங்களை அமல்படுத்த, மத்திய – மாநில அரசுகள் எதுவும் செய்வதில்லை. வயதானவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீடு, மருத்துவ வசதிகளுக்கு அவர்கள், குடும்ப உறுப்பினர்களையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. எனவே, ஜீவனாம்சம் மற்றும் பெற்றோர் நலச் சட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும், மூத்த குடிமக்களுக்காக, முழு நேர தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டத்தை, நாட்டில் உள்ள, 622 மாவட்டங்களிலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி பானுமதி உட்பட மூன்று பேர் அடங்கிய அமர்வு, மூத்த குடிமக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ‘இந்த வழக்கில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவையும், ஒரு பிரதிவாதியாகச் சேர்த்த நீதிபதிகள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா; ஆம் என்றால், அதன் நகலை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அதுபோன்ற திட்டம் ஏதும் வகுக்கப்படுமா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்’ என, கோர்ட் உத்தரவிட்டது.

N5