செய்திகள்

மூத்த பத்திரிகையாளர் ஷண் காலமானார்


சிரேஷ்ட பத்திரிகையாளர்   எஸ்.  சண்முகராஜா தனது 85 ஆவது வயதில்  (02.03.2021) காலமானார். 55 வருடங்கள் தொடர்ச்சியாக  ஊடகத்துறையில்  கால்பதித்த  சண்முகராஜா  சிலவாரங்கள்  சுகவீனமுற்றிருந்த நிலையில்  நேற்றுக்காலை  யாழ்ப்பாணத்தில் காலமானார்.

1935 ஆம் ஆண்டு   யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் 1955  இலிருந்து கொழும்பை வசிப்பிடமாகவும்  கொண்ட ஷண் என்று எல்லோராலும்  அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர்   சண்முகராஜா கலை, இலக்கியம் , சினிமாத்துறை, தமிழக அரசியல்,  என பல்வேறு பரிணாமங்களில்  தனது ஊடகப்பணியினை   ஆற்றிவந்திருந்தார்.

1940 களில்  தனது ஆரம்பக்கல்வியை  யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் ( அன்றைய காலகட்டத்தில்   சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள்)  அதற்கடுத்து யாழ். மத்திய கல்லூரியிலும்   பயின்ற  ஷண் 1964 ஆம் ஆண்டு முன்னாள்  தினகரன்  ஆசிரியர் வி.கே. பி. நாகனை  ஆசிரியராகக் கொண்டு  எம்.டி. குணசேனாவின் இன்டிபென்டன் நியூஸ்பேப்பர்ஸ்  லிமிடெட்டிலிருந்து வெளிவந்த  ‘‘ராதா’’ சஞ்சிகை  மூலம் பத்திரிகைத் துறைப் பயணத்தை ஆரம்பித்தார்.

1966 ஆம் ஆண்டு  அதே பத்திரிகை ஸ்பானத்திலிருந்து இலங்கையின் தமிழ்ப் பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தை  பிரதம  ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த  தினபதி,  சிந்தாமணி, சூடாமணியிலும் பணியாற்றியவர்.  கடைசியாக  வீரகேசரயிலும்  பணியாற்றி ஓய்வு பெற்ற  போதிலும்   இறுதிக்காலம் வரை  இவரது  ஆக்கங்கள்  சுதந்திர ஊடகவியலாளராகப்  பணியாற்றுவதன் மூலம்  ஷண்  , சஞ், (ஷண்)ஜயன், அன்டர்ஷண் என்ற புனைப்பெயர்களில் வெளிவந்துகொண்டிருந்தது.

2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  14 ஆம் திகதி  வாழ்நாள்  நீண்டகாலம்  பத்திரிகைத்துறையில்  சேவைக்காக    இலங்கை பத்திரிகை   ஸ்தாபனமும் , இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும்    இணைந்து  நடத்திய   ஊடகவியலாளர்களை   கெளரவிக்கும் 10 ஆவது  வருட விருது வழங்கும் விழாவிலும்   தங்கப் பதக்கம்     வழங்கி  கெளரவிக்கப்பட்ட ஷண்   31கலாபூஷணம் அரச விருது  வழங்கும் விழாவிலும்     விருது வழங்கி  கெளரவிக்கப்பட்டார்.