செய்திகள்

விண்வெளியிலா மூன்றாவது உலக மகாயுத்தம்? (படங்கள்)

” இது சீனாவின் கடற்படை. இது சீனாவின் கடற்படை. விரைவாக அகன்று செல்லுங்கள் ” (This is the Chinese navy. This is the Chinese navy. Please go away quickly).

சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பரப்பின் மேல் பறந்துகொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் P -8 என்ற உளவு விமானத்துக்கு அந்த கடற்பகுதியில் பகுதியில் சீனக் கடற்படை அமைத்துவரும் தளம் ஒன்றில் இருந்து கோபம் மிக்க தொனியில் சில வாரங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை இது. இதனை CNN செய்தியாளர் ஒருவர் நேரடியாக அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

ஆனால், இந்த நிலைமை விண்வெளியில் ஏற்படும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்று கூறுகிறார்கள்  நிபுணர்கள். இராணுவ வல்லமை மிக்க விண்கலங்களை தயாரித்து விண்வெளிக்கு அனுப்புவதில் வல்லரசு நாடுகள் தீவிரம் கட்டி வருவதால், மூன்றாம் உலக மகா யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அது தரைக்கும், கடலுக்கும், ஆகாயத்துக்கும் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்காது என்றும், அது விண்வெளியில் தான் கூடுதலாக நடக்கும் என்றும் அவர்கள்  கூறுகிறார்கள்.

கீழேயுள்ள 8 படங்கள் சில வல்லரசு நாடுகள் எந்தளவுக்கு இராணுவ ஆற்றல் மிக்க விண்கலங்களை தயாரித்து விண்வெளிக்கு அனுப்புவதில் ஈடுபட்டுள்ளன என்பதை காட்டுகின்றன.

1

அமெரிக்க விமானப்படை அண்மையில் தனது Orbital Test Vehicle (The X 37-B) என்ற விண்கலத்தின் மூன்றாம் கட்ட ஏவுகையை நிகழ்த்தியது. தனது விண்வெளி யுத்த தளபாடங்களுக்காக அமெரிக்கா அண்மையில் 5 பில்லியன் டொலர்கள் பணத்தை ஒதுக்கியுள்ளது.

2

Long March -2F காவியில் வைத்து சுமக்கப்படும் Shenzhou X என்ற விண்கலம் சீனாவில் 2013 ஜூன் மாதம் ஏவு தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை காண்கிறீர்கள். சீனாவின் Tiangong -1 என்ற விண்வெளி அலகுக்கு Shenzhou X என்ற விண்கலம் இதுவரை மூன்று விண்வெளி வீரர்களை சுமந்து சென்றுள்ளது. துப்பறியும் செய்மதிகள் மற்றும் வழிகாட்டும் உதவித் தொழில்நுட்பம் ஆகியவை உட்பட சுமார் 130 க்கும் அதிகமான விண்வெளி நிகழ்ச்சித் திட்டங்களை சீனா கடந்த சில வருடங்களில் தொடங்கியிருக்கிறது.

3

2014 பெப்ரவரியில் ரஷ்யாவின் பைக்கனூர் விண்வெளி ஏவு தளத்தில் ரஷ்யாவின் Proton -M என்ற ராக்கட் , துருக்கியின் Turksat -4A என்ற தொடர்பாடல் செய்மதியை காவி நிற்பதை காண்கிறீர்கள். நாடுகளின் வர்த்தகம் மற்றும் இராணுவ திட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் பெருமளவுக்கு தொடர்பாடல் செய்மதிகளில் தங்கியிருப்பதால் , யுத்தம் ஒன்று ஏற்படும் நிலையில் விண்வெளியானது ஒரு யுத்த களமாக மாறும் பேராபத்து இருக்கிறது.

4

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2009 ஜூன் மாதம் அமெரிக்காவின் வாண்டேன்பேர்க் விண்வெளி ஏவு தளத்தில் X -33B என்ற விண்வெளி விமானமானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆளில்லா இந்த இராணுவ விண்வெளி விமானமானது ராக்கட்டின் மூலம் விண்ணுக்கு உந்தப்பட்டு செயற்ப்படுத்தப்படுகிறது. இந்த விமானமானது துப்பறியும் செய்மதிகள் கூட செல்ல முடியாத இடங்களுக்கு செல்ல வல்லதுடன் செய்மதிகள் செயல் இழக்கும்போது சிறந்த மாற்றீடாகவும் பயன்படுத்தப்பட முடியும்.

5

2011 நவம்பரில் சீனாவின் Shenzhou X என்ற விண்கலமானது விண்ணில் நிறுத்தப்பட்டுள்ள Tiangong -1 என்ற விண்வெளி அலகின் ஒழுக்குடன் அணைவதை CCTV மூலம் எடுத்த இந்தப் படம் காட்டுகிறது. மிகவும் உச்ச கதியில் இயங்கும் இரண்டு விண் கலங்களை ஒன்றாக இதனால் கொண்டுவர முடிவதுடன் விண்வெளியிலே யுத்தம் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் இலக்குகளை தாக்கி அழிக்கவும் பயன்படுத்தலாம்.

6

Tiangong -1 என்ற விண்வெளி அலகின் ஒழுக்குடன் அணையும் Shenzhou 8 என்ற விண்கலத்தின் ஆய்வுகூடத்தில் அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட வீடியோவின் ஒரு படத்தை காண்கிறீர்கள். இரண்டு ஆளில்லா விண்கலங்களுக்கு இடையிலான தனது முதலாவது இணைவுச் சோதனையை சீனா 2011 நவம்பரில் முதலில் நடத்தியது. விண்வெளியிலே மனிதன் தனது கால் தடத்தை பதிக்கும் சீனாவின் நீண்டகால திட்டத்தின் ஒரு படிக்கல்லாக இதனை கருதலாம். அமெரிக்கா, ஜப்பான், கனடா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து விண்வெளியிலே நிறுத்தி வைத்திருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக ஒரு விண்வெளி நிலையத்தை 2022 ஆம் ஆண்டில் விண்ணிலே நிறுத்துவதற்கு சீனா மும்முரமாக செயற்பட்டு வருகிறது.

7

2015 மார்ச் 28 ஆம் திகதி ரஷ்யாவின் பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் Soyus TMA -16M என்ற விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தை சேர்ந்த்த அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி செல்கிறது. ரஷ்யாவின் சில விண்வெளி வசதிகளில் தங்கியிருக்கும் அமெரிக்காவின் நிலைமையானது விண்வெளியிலே யுத்தம் ஒன்று வெடிக்கும் பட்சத்தில் அதற்கு ஆபத்தான ஒரு நிலைமையினை ஏற்படுத்த முடியும்.

8

மனிதனை விண்ணுக்கு சுமந்து செல்லும் சீனாவின் நான்காவது நடவடிக்கையின்போது அதன் Shenzhou 9 விண்கலமானது கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூ குவான் விண்வெளி தளத்தில் இருந்து 2012 ஜூன் மாதம் கிளம்பிச் செல்வதை காண்கிறீர்கள்.