செய்திகள்

மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா? உயர் நீதிமன்ற விளக்கத்தை கோரும் மகிந்த

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் யாப்பின் 18ஆவது சட்டத் திருத்ததிற்கு அமைய மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது சம்பந்தமாக சட்ட விளக்கம் ஒன்றை வழங்குமாறு இலங்கையின் உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

அரசியல் யாப்பின் 18ஆவது திருத்தம் அமலுக்கு வந்த நேரத்தில் தான் இரண்டாவது பதவிக் காலத்தை வகித்துவந்ததால், அத்திருத்தத்திற்கேற்ப மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவதில் சட்ட ரீதியான சிக்கல் ஏதும் உள்ளதா என்பது பற்றி உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டுமென ஜனாதிபதி முன்வைத்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்றிருந்த அரசியலமைப்பை 18ஆவது சட்டத் திருத்தம் நீக்கியிருந்தது. இருந்தபோதிலும் 18 ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி இரண்டாவது பதவிக்காலத்தை பொறுப்பேற்று, முன்னைய அரசியலமைப்புக்கு இசைவாகவே சத்தியப்பிரமாணம் செய்திருப்பதால் மூன்றாவது தடவையாக அவர் போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்த மனு சம்பந்தமாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் வரும் 7ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அதனை நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற பதிவாளர் எம்.எம்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது பற்றி இப்போதைக்கு உத்தியோகபூர்வமாக தன்னால் பதில் சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக கருத்து சொல்லக் கேட்டு உச்சநீதிமன்றத்திடம் இருந்து தனக்கு கடிதம் ஒன்று வந்துள்ளதாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த மனு விசாரிக்கப்படுகின்ற தேதி பற்றி அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தின் பதிவாளரிடம் தான் கேட்டுள்ளதாக ஜெயசூரிய கூறினார்.