மெல்பனில் நிகழ்ந்த மூன்று இலக்கிய நிகழ்வுகள்
மெல்பனில் கடந்த டிசம்பர் மாதம் மூன்று இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. 2014 ஆம் ஆண்டு நிறைவுற்றவேளையில் இலக்கிய ஆர்வலர்களின் கருத்துப்பகிர்வாகவே குறிப்பிட்ட நிகழ்வுகளில் ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன.
டிசம்பர் 20 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பன் டெறபின் இன்டர் கல்சர் மண்டபத்தில் சட்டத்தரணியும் இலக்கிய ஆர்வலருமான செல்வத்துரை ரவீந்திரன் தலைமையில் நடந்த, சிட்னியில் சமீபத்தில் மறைந்த ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர்கள் காவலூர் ராஜதுரை – எஸ்.பொன்னுத்துரை ஆகியோருக்காக நடத்தப்பட்ட நினைவரங்கு குறித்த மூத்த இலக்கிய ஆளுமைகளின் படைப்பிலக்கிய உலகம் பற்றிய மதிப்பீட்டு அரங்காகவே நிகழ்ந்தது.
மறைந்த படைப்பாளிகள் இருவரதும் உருவப்படங்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. கலாநிதி கௌசல்யா அந்தனிப்பிள்ளையின் வரவேற்புரையுடன் தொடங்கிய நினைவரங்கில் காவலூர் ராஜதுரையின் சிறுகதை இலக்கியம் தொடர்பான மதிப்பீட்டுரையை இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த ஆசிரியையும் கலை – இலக்கிய ஆர்வலருமான திருமதி பாவனி செபமாலை தாசன் நிகழ்த்தினார்.
காவலூரின் இலங்கை வானொலிப்பணிகள் குறித்த உரையை மெல்பன் வானமுதம் வானொலி ஊடகவியலாளர் திரு. நவரத்தினம் அல்லமதேவன் நிகழ்த்தினார். அவுஸ்திரேலியாவில் முன்னர் வெளிவந்த மரபு என்னும் கலை, இலக்கிய மாசிகையில் எஸ்.பொ. எழுதி பலரதும் பாராட்டுக்களைப்பெற்ற நனவிடை தோய்தல் தொடர் குறித்து மரபு ஆசிரியர் திரு .விமல் அரவிந்தன் எழுதிய கட்டுரையை இலங்கையிலிருந்து வருகைதந்திருந்த இலக்கிய ஆர்வலரும் கண்டி அசோக்கா வித்தியாலய ஸ்தாபகர் நடராஜாவின் துணைவியார் திருமதி லலிதா நடராஜா சமர்ப்பித்தார்.
எஸ்.பொ.வின் சிறுகதைகள் , நாவல் மற்றும் அவரது வாழ்க்கைச்சரித நூல் தொகுப்பு வரலாற்றில் வாழ்தல் முதலானவை பற்றிய மதிப்பீட்டுரையை திருமதி மாலதி முருகபூபதி சமர்ப்பித்தார்.
இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மூத்த இலக்கிய திறனாய்வாளர் திரு. கே. எஸ் சிவகுமாரனும் இலக்கிய விமர்சகர் திரு. வன்னியகுலமும் காவலூர் ராஜதுரை – எஸ்.பொ. ஆகியோரின் வாழ்வும் பணிகளும் குறித்த நினைவு மீட்டல் உரைகளை நிகழ்த்தினார்கள்.
நினைவரங்கைத்தொடர்ந்து இடம்பெற்ற முருகபூபதின் இருபதாவது நூலான சொல்ல மறந்த கதைகள் நூலின் விமர்சன அரங்கு இடம்பெற்றது.
இளம் தலைமுறைப்படைப்பாளி திரு. ‘ ஜே.கே.’ ஜெயக்குமரான் மற்றும் இலக்கிய ஆர்வலரும் மனித உரிமைச்செயற்பாட்டாளருமான திரு. ஜூட் பிரகாஷ் ஆகியோர் நூலை விமர்சித்தனர். நூலாசிரியர் திரு. முருகபூபதி ஏற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் கலந்துகொண்ட இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த சமூகச்செயற்பாட்டாளர் அன்பர் திரு. நித்தியானந்தனுக்கும் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்தவர்களுக்கும் நூலின் சிறப்பு பிரதிகளை திருமதி ஜெஸி ரவீந்திரன் வழங்கினார்.
மெல்பன் எழுத்தாளர் நடேசனின் மணிவிழா.
மெல்பனில் உதயம் இருமொழி மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியரும் இலக்கியப்படைப்பாளியுமான டொக்டர் நடேசனின் மணிவிழா கடந்த 27 – 12- 2014 ஆம் திகதி சனிக்கிழமை மல்கிரேவ் சமூக மண்டபத்தில் நடந்தது.
இந்நிகழ்வில் விக்ரோரியா மாநிலத்தின் இலங்கைக்கான பிரதித்தூதுவர் திரு. புஷ்பகுமார, பஹன என்னும் இதழின் நிருவாக ஆசிரியர் திரு. பந்துல திஸாநாயக்கா, இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மூத்த இலக்கிய திறனாய்வாளர் திரு. கே. எஸ். சிவகுமாரன் மெல்பன் சங்கநாதம் வானொலி ஒலிபரப்பாளர் திரு. விக்கிரமசிங்கம், திரு. இராஜரட்ணம் சிவநாதன், டொக்டர் ஐமன் ஹசான், செல்வத்துரை ரவீந்திரன் , முருகபூபதி ஆகியோர் நடேசனின் சமூகப்பணிகளையும் அவுஸ்திரேலியாவில் நடேசன் மேற்கொள்ளும் இன நல்லிணக்கச்செயற்பாடுகளையும் அவரது படைப்பிலக்கியத்துறை பற்றியும் உரையாற்றினர்.
நடேசனின் பிள்ளைகள் நவீன நடேசன், கிஷானி கிறிஸ் ஆகியோரும் உரையாற்றினர்.
நடேசன் இதுவரையில் வண்ணாத்திக்குளம், உனையே மயல்கொண்டு, அசோகனின் வைத்தியசாலை ஆகிய மூன்று நாவல்களையும் வாழும் சுவடுகள் என்னும் தலைப்பில் தமது விலங்கு மருத்துவத்துறை தொழில் சார்ந்த சிறுகதை வடிவில் அமைந்த இரண்டு தொகுப்புகளையும் மேலும் பல சிறுகதைகளையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகளும் எழுதியிருப்பவர்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் , இலங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழ் அகதிகள் கழகம் முதலானவற்றின் முன்னாள் தலைவருமாவார்.
இராப்போசன விருந்துடன் நிறைவடைந்த மணிவிழாவில் நடேசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். இந்நிகழ்வை டொக்டர் திருமதி சியாமளா நடேசனும் திரு. ஸ்ரீஸ்கந்தராஜாவும் ஒழுங்கு செய்திருந்தனர்
திறந்த வெளிப்பூங்காவில் கலை – இலக்கிய சந்திப்பு.
மெல்பனுக்கு கடந்த மாதம் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த இலக்கிய திறனாய்வாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களான திருவாளர்கள் கே.எஸ். சிவகுமாரன் , வன்னியகுலம் , ஆசிரியை திருமதி பாவானி செபமாலை தாசன் ஆகியோருடனான கலை – இலக்கிய சந்திப்பு முற்றிலும் வித்தியாசமான ஒன்று கூடலாக மெல்பனில் ஜெல்ஸ் பார்க் பூங்காவில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்றது.
மெல்பனில் தற்பொழுது கோடை காலம் தொடங்கியிருப்பதனால் இரவு 9 மணி வரையில் சூரியவெளிச்சத்தை காணலாம்.
கே.எஸ். சிவகுமாரன், வன்னியகுலம், பவானி செபமாலை தாசன் ஆகியோருடனான கலந்துரையாடலில் திருவாளர்கள் பாடும் மீன் சு. சிறிகந்தராசா, நவரத்தினம் அல்லமதேவன், ஆவூரான் சந்திரன். நவரத்தினம் இளங்கோ, ஸ்ரீகாந்தன், அபர்ணா சுதன், முருகபூபதி உட்பட சிலர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் சமகால இலக்கியம் – புகலிட இலக்கியம் மாணவர்களும் கலை, இலக்கியப்பிரக்ஞையும் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. மக்களிடமும் மாணவர்களிடமும் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச்செய்வதற்கு தடையாக நீடிக்கும் காரணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பல்கிப்பெருகியுள்ள இணையத்தளங்கள் வலைப்பதிவுகள் மற்றும் முகநூல்களின் ஆதிக்கத்தின் சாதக – பாதக அம்சங்கள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடல் சுவாரஸ்யமாகவும் கருத்துச்செறிவுடனும் நீடித்து இரவு ஏழு மணியளவில் நிறைவுற்றது.
கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மூவருக்கும் அவுஸ்திரேலியாவில் வெளியான இலக்கிய நூல்கள் , இதழ்கள் வழங்கப்பட்டன.
மலரும் புத்தாண்டிலும் இலக்கியத்தால் இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் இச்சந்திப்பு உணர்த்தியது.