செய்திகள்

மேபீல்ட் தோட்டத்திலும் மண்சரிவு ஏற்பட்டு, உயிர்கள் காவு கொள்ளப்படும் – மக்கள் அங்கலாய்ப்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் மேல்பிரிவு தோட்டத்திலும் மண்சரிவு ஏற்பட்டு, உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கு முன்பதாக தம்மை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு மலையக தலைமைகள் முன்வர வேண்டும் என மேபீல்ட்  தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அனர்த்த பிரதேசமாக கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மேபீல்ட் தோட்டத்தில், கற்பாறை தொடரிலிருந்து புதன்கிழமை (20.04.2016) அன்று இரவு பாரிய கற்பாறைகள் சரியத் தொடங்கியதாகவும் இக்கற்பாறைகள் முற்றுமுழுதாக குடியிருப்புகளை நோக்கி வராமல் பாதியிலே நின்றுவிட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் மழை காலநிலை தொடர்ந்து நீடிக்குமானால் இக்கற்பாறைகள் குடியிருப்பை நோக்கி வருவதை தடுக்க முடியாது என தோட்ட மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இத்தோட்டத்தில் சுமார் 116 குடும்பங்களை சேர்ந்த 500ற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பிலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் மேற்படி கற்பாறை தொடரானது அமைந்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையமானது கடந்த வருடம் மேற்படி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, கள ஆய்வை மேற்கொண்டதுடன் இப்பகுதி மீரியபெத்தையை போன்று மண்சரிவுக்கு உள்ளாக்கூடிய அனர்த்த பிரதேசமென அறிவித்தது.

இந்நிலையில் இம்மக்கள் குடிபெயர்வதற்கு உரிய இடமில்லை எனக் கூறி தொடர்ந்து அப்பகுதியிலே வாழ்ந்து வருகின்றனர். இக்கற்பாறைகள் சரியுமாயின் இப்பிரதேசம் முற்றுமுழுதாக அழிவடையும் என்பதுடன் 500 உயிர்களும் காவுகொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இப்பகுதியிலிருந்து தம்மை வெளியேற்றி, பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்துமாறு பிரதேச மக்கள் கோரி்க்கை விடுக்கின்றனர்.

photo (1) photo (4)