செய்திகள்

மேலும், மேலும் பலவீனமடையும் தமிழர் அரசியல்

யதீந்திரா

தமிழர் அரசியல் அதிகம் அதிகம் பலவீனமாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு வெளியிலிருப்பவர்கள் எவரும் காரணமல்ல. மாறாக, தமிழர் அரசியல் தமிழர்களாலேயே பலவீனப்படுத்தப்படுகின்றது. அண்மையில் போராட்டம் என்னும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சில நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் விவாதங்களும், இதற்கு சிறந்த உதாரணமாகும். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை – என்னும் சுலோகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக பேரணியில் மக்கள் தன்னியல்பாகவே பெருமளவில் திரண்டிருந்தனர். 2009இற்கு பின்னர் இடம்பெற்ற மிக முக்கியமானதொரு தன்னியல்பான எழுச்சியாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டியை குறிப்பிடலாம். ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் மக்களின் தன்னியல்பான எழுச்சியை மலினப்படுத்துவதற்கே பயன்பட்டிருக்கின்றது.

அண்மைக்காலமாக இடம்பெற்ற அனைத்து ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கையின் மீது கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பிலேயே அனைவரும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். ஆரம்பத்தில் புலம்பெயர் அமைப்புக்களால் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்கள், பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள பிரதான தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பாக மாறியது. அல்லது மாற்றப்பட்டது. இந்த பின்புலத்தில்தான் தமிழ்த் தேசியத்தை பெயரில் வைத்திருக்கும் பிரதான மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து, மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கும், இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர். இதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உட்பட சில விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பில் எனது முன்னைய பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். அதனால் இந்த இடத்தில் மீளவும் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்கின்றேன். மூன்று கட்சிகளின் கடிதம் அனுப்பப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே, இந்தக் கலந்துiயாடல்களை ஆரம்பித்த பிரதான புலம்பெயர் அமைப்புக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோரது கையெழுத்துக்களுடன் தங்களது பரிந்துரைகள் அடங்கிய ஆவணத்தை பேரவையின் ஆணையாளருக்கும், பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பிவிட்டனர். உண்மையில் மூன்று கட்சிகள் இணைந்து அனுப்பிய கடிதத்திற்கும் புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, அனுப்பிய ஆவணத்திற்குமிடையில் பெரிய வேறுபாடுகள் எவையுமில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை வெளியாகியது. புலம்பெயர் அமைப்புக்கள், மூன்று கட்சிகள் ஒன்றாக முன்வைத்த விடயங்கள் அனைத்தும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. காகமிருக்க பனம்பழம் விழுந்த கதையாக – தங்களின் அறிக்கைகளால்தான் ஆணையாளர் இவ்வாறானதொரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார் என்று சிலர் கூறிக்கொள்வதற்கு வாய்ப்பாகியது. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது, குறித்த அறிக்கை ஒரு மாதத்திற்கு முன்பதாகவே மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால், அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டதாக சுமந்திரன் தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் பனம்பழம் விழுந்ததற்கு நிச்சயமாக காகம் காரணமல்ல.

உண்மையில் ஒப்பீட்டடிப்படையில் பேரவையின் உயர்ஸ்தானிகரின் அறிக்கை காட்டமான ஒன்றுதான். அதில் முரண்பட ஒன்றுமில்லை. சில குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக பணியாற்றிவருகின்றன. அவர்கள் ஒரு வேளை இதற்கு தாங்களும் ஒரு காரணமென்று கூறக்கூடும். அவ்வாறு கூறுவதற்கான உரிமை அவர்களுக்கிருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இங்கு பலரும் கவனிக்காத ஒரு பக்கமுண்டு. அதாவது, பேரவையின் உயர்ஸ்தானிகர் மிஷல் பேச்லெட் தனிப்பட்ட பின்னணி. மிஷல், தென்னமரிக்க நாடான சிலி நாட்டின் முன்னைநாள் ஜனாதிபதி. சிலியின் சர்வாதிகாரியான ஒகஸ்டோ பினோசேவின் ஆட்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர். அவரது தந்தை கொல்லப்பட்டார். அவரும், அவரது தாயாரும் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தனர். இவ்வாறான தனிப்பட்ட அனுபவங்களை கொண்டிருக்கும் ஒருவரிடம், மனித உரிமைகள் மீதான நாட்டம் இயல்பாகவே இருக்கவாய்ப்புண்டு. அவரது தனிப்பட்ட ஈடுபாடும் அவரது அறிக்கையில் செல்வாக்கு செலுத்தியிருக்க நிச்சயம் வாய்ப்புண்டு. திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்காக தென்னமரிக்க அரசியல் ஆய்வாளரான ரொன் ரெட்நூரை நேர்கண்ட போது, இந்த விடயத்தை அவரும் ஆமோதித்திருந்தார்.

தவிர, பேரவையின் உயர்ஸ்தானிகர் என்னும் வகையில், பதினொரு வருடகால அனுபவங்களுக்கு பின்னர், எவ்வாறான பரிந்துரைகளை முன்வைக்க முடியுமோ, அதனைத்தான் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்துமே உயர்ஸ்தானிகரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தன. தமிழர் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால் அது மற்றவர்களால் பரிகசிக்கப்படுவதாக இருக்கக் கூடாது. பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை – தொடர்பில் ராஜதந்திர வட்டாரத்திலும் ஒரு அவதானம் இருந்தது. அமெரிக்கத் தூதுவர் கூட அது தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற செயற்பாடுகள், மக்களின் தன்னியல்பான எழுச்சியை மழுங்கடிக்கும் காரியங்களாகவே இருந்தன. பொத்துவில் தொடங்கி பொலிகண்டியை பரிகசிக்கும் வகையிலேயே அனைத்தும் இடம்பெற்றது. இதற்கு பொத்துவில் தொடங்கி பொலிகண்டியின் ஏற்பாட்டாளர்களாக தங்களை காண்பித்துக் கொண்டவர்கள் கூட துனை போனமைதான் விந்தையானது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டிக்கு பின்னர்தான் இணைத் தலைமை நாடுகளின் பூச்சிய வரைபு வெளியாகியிருந்தது. அதில் தமிழர் எதிர்பார்த்த பல விடயங்கள் இருக்கவில்லை. அதன் பின்னர் இரண்டாவது வரைபு வெளியாகியது. அதிலும் பெரியளவில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கவில்லை. இந்த விடயங்களை தமிழர் தரப்புக்கள் தெளிவாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் உண்ணாவிரதம், பேரணிகளை மேற்கொண்டால் பிரேரணை வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்னும் அடிப்படையிலேயே, சில தமிழ் அமைப்புக்கள் செயற்பட்டிருந்தன. இதன் விளைவாகவே, பிரித்தானியாவில் ஒரு பெண்மணி உணவு தவிர்ப்பின் மூலம், பிரித்தானிய பேரரசிற்கு அழுத்தங்களை கொடுக்கப் போவதாகக் கூறி, தன்னை வெளிப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக வடக்கு கிழக்கில் சில அடையாள உணவுதவிர்ப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் காலமென்பதால் தமிழ் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளும் இதற்கு ஆதரவாக குரலெழுப்பியிருந்தனர். சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் பிறிதொரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதே இவ்வாறான அனைத்து செயற்பாடுகளினதும் கோசமாக இருந்தது.

இன்று உண்ணாவிரதம் இருந்தவர் தொடர்பிலும் அதன் அரசியல் தொடர்பிலும் இ;டம்பெறும் சமூக ஊடக உரையாடல்கள், தமிழர் அரசியலின் மலினமான பக்கத்திற்கான சாட்சிகளாக ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. அவரது தனிப்பட்ட வாழ்விலிருந்து அனைத்தும் பேசுபொருளாக்கப்பட்டிருக்கின்றது. பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினடிப்படையில்தான் உணவு தவிர்ப்பு கைவிடப்பட்டதாக ஒரு சிலரும் – இல்லை அது பொய்யென்று இன்னொரு தரப்பும் வாதம்புரிகின்றது. ஆனால் இவை அனைத்தும் எதற்காக செய்யப்பட்டதாக கூறப்பட்டதோ, அந்த விடயங்கள் எவையுமே புதிய பிரேரணையில் உள்வாங்கப்படவில்லை. அதனை மேற்குலகம் கண்டுகொள்ளவுமில்லை. அவ்வாறாயின் இந்த செயற்பாடுகளின் ஒட்டுமொத்த பயன் என்ன? இப்போதும் சிலர் உண்ணாவிரதமிருப்பதாக கூறிக்கொள்கின்றனர். அதன் பொருள் என்ன? எதற்காக இந்த செயற்பாடுகள்? சுயநல பிரச்சாரங்களுக்காகவா?

முதலில் தமிழர் தரப்பு ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். தாயின் பசி, தங்கையின் பசி – இவற்றுக்காகவெல்லாம் ஒரு வல்லரசு தனது கொள்கை நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளாது. ஒருவர் உணவருந்தாமல் இருப்பதால் வல்லரசுகள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுமென்றால், ஒவ்வொரு நாடுகளிலும் சிலர் உண்ணாமல் இருப்பதால் அனைத்தையும் சாதித்துக்கொள்ளலாமே! உண்மையில் உணவு தவிர்ப்பு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவாகும். அது ஒரு சமூகத்தின் கூட்டுமுடிவல்ல. சமூக கூட்டு முடிவுகள்தான் ஒரளவாவது கவனஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியவை.

ஒரு பெண்மணி உண்ணாவிரதமிருந்ததாக கூறியே அனைத்து விவாதங்களும் நடக்கின்றன, அவ்வாறாயின் அவரை பின்பற்றி புலம்பெயர் நாடுகள் தோறும் ஏன் பல்லாயிரக்கணக்கானவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபடவில்லை? ஒரு வேளை, அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அது ஒரு கூட்டு உணர்வின் வெளிப்பாடாக நோக்கப்பட்டிருக்கும். உண்மையில் இவ்வாறான தனிநபர் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படக் கூடாது. அரசியல் ஆய்வுகள் என்னும் பெயரில் இவைகள் ஊக்குவிக்கப்படக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகளில் ஒருவர் உயிரிழந்தால், ஒரு குடும்பம் ஒருவரை இழக்குமேயன்றி வேறு எதுவும் நடக்காது. தமிழ் நாட்டில் முத்துக்குமாரு செங்கொடி என, சிலர் தங்களுக்கு தாங்களே தீமூட்டி, இறந்தனர். இதனை சிலர் தீக்குளிப்பு என போற்றினர். இவ்வாறு சிலர் இறந்துபோனதால் இந்திய வெளிவிவகாரக் கொள்கை மாறியதா? உண்மையில் இவற்றை புதுடில்லி கண்டுகொள்ளவேயில்லை. ஒரு ஏழைத் தாய், தனது மகனை இழந்து போனதைத் தவிர வேறு எதுவும் நடந்துவிடவில்லை. இது போன்ற விடயங்களை ஊக்குவிப்பதும், போற்றுவதும் ஒரு அரசியல் வங்குரோத்து நிலைமையாகும். எனவே உண்ணாவிரதமென்னும் பெயரில் மற்றவர்களை இறக்குமாறு தூண்டுவது, நெருப்பில் வெந்து சாகுமாறு மற்றவர்களை ஊக்குவிப்பது மிகவும் மோசமானதொரு சமூக விரோத செயலாகும்.

விடயங்களை தெளிவாக விளங்கிக்கொண்டே எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டும். மேற்குலக தலையீடுகளின் இலக்கு, தாராளவாத உலக ஒழுங்குடன் ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதும் அதன் ஊடாக, அரசாங்கத்தை ஒரு வழிக்கு கொண்டுவருதுமேயன்றி, இலங்கை அரசை பலவீனப்படுத்துவதல்ல. இலங்கையின் மீதான அழுத்தங்களை இந்த அடிப்படையில்தான் விளங்கிக்கொள்ள வேண்டும். அரசாங்கம்தான் இங்கு இலக்கேயன்றி, இலங்கை அரசல்ல. மேற்குலகின் அதிகபட்ச இலக்கு என்பது ஒரு ஆட்சிமாற்றத்திலேயே முடிவுறும். அதே வேளை அவ்வாறான ஆட்சி மாற்றமொன்று ஏற்படுகின்ற போது, அதன் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்தின் மீதான அதிக நெருக்கடிகளை கொடுக்கும் வகையிலும் அவர்களது அழுத்தங்கள் இருக்காது. இதனை விளங்கொள்ளாமல் தமிழர் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இறுதியில், தமிழர் அரசியலை மற்றவர்கள் நகைச்சுவையாக நோக்கும் நிலைமையையே ஏற்படுத்தும். ஒரு ஆங்கில பழமொழியுண்டு. அதாவது, அளவுக்கதிகமான சமையல்காரர்கள் சேர்ந்து உணவை பழுதாக்கினர். தற்போது தமிழர் அரசியலில் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. மேய்ப்பர்கள் அதிகரித்ததால், ஆடுகள் போகுமிடத்தை தவறவிட்டுக் கொண்டேயிருக்கின்றன. தமிழர் அரசியல் மேலும் மேலும் பலவீனமடைந்துசெல்கின்றது.