செய்திகள்

மேலும் 36 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கப்படுவர்: வெளிவிவகார அமைச்சு உத்தரவு

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்ட மேலும் 36 பேரை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு பணித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில், அரசியல் செல்வாக்கில் இரண்டாவது, மூன்றாவது செயலர்களாகநியமிக்கப்பட்ட 36 பேரையே நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,

இவ்வாறு திருப்பி அழைக்கப்பட்டோரில், பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவும் ஒருவராவார். அவர் தற்போது அவுஸ்ரேலியாவில் பணியாற்றி வருகிறார்.

அதேவேளை, அரசியல் செல்வாக்கில் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 29 பேரை நாடு திரும்புமாறு புதிய அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் 36 பேர் இப்போது அழைக்கப்படுகின்றார்கள்.