செய்திகள்

மே 22 இல் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

வரும் 22-ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 22.05.2015 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி 4 நாட்கள் ஆகியும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவித்து வந்த நிலையில் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 11-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் முற்றிலுமாக விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.