செய்திகள்

மைத்திரிக்கு உதவ நோர்வே, அவுஸ்திரேலியா ஆர்வம்

நல்லிணக்கம்,சமாதானம் மற்றும் ஜனநாயகம் ஆகியன நிலவும் இலங்கையை ஏற்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உதவ தயார் என நோர்வே தெரிவித்துள்ளது
இலங்கை மக்களுக்கும், புதிய ஜனாதிபதிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பேர்க் தெரிவித்துள்ளார்.
மக்கள் வாக்களிப்பதற்கு தமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதற்கு உறுதுணையாகவிருந்த தேர்தல் ஆணையாளர், கண்காணிப்பாளாகள் உட்பட அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம் மற்றும் ஜனநாயகம் நிலவும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை ஏற்படுத்துவதில் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவளைஜனநாய சீர்திருத்தம்,நல்லாட்சி மற்றும் ஊழல் ஒழிப்பு போன்ற இலங்கையின் புதிய நடவடிக்கைகள் வெற்றிபெறுவதற்கு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிசப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவரது நிகழ்ச்சி நிரலிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இரு தரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்களில் சேர்ந்து செயற்படுவதற்கும் அவுஸ்திரேலியா ஆர்வமாகவுள்ளது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.