செய்திகள்

மைத்திரிபால சிறிசேன நாளை பாகிஸ்தான் செல்கிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பாகிஸ்தானுக்கு தனது முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பாகிஸ்தான் ஜனாதிபதி மமூன் ஹுசேன் ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்றே இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை பாகிஸ்தான் செல்லும் அவர், எதிர்வரும் 7ம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார். இந்தப் பயணம், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும், பொருளாதார ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்று பாகிஸ்தான்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, நடத்தப்படும் பேச்சுக்களில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் காணப்படும் தடைகளை அகற்றுவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும்.

ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, இந்தியா, பிரித்தானியா, சீனா, ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.