செய்திகள்

மைத்திரியின் நூறு நாள் வேலைத் திட்டம் அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரு வெற்றியாம்: விஜயகலா மகேஸ்வரன்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் எதிர்வரும் காலங்களில் இன்னும் பூரணமான வேலைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. வலிகாமம் வடக்கில் நீண்ட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.எனவே இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரு வெற்றியாகவே கருதுகிறோம்”இவ்வாறு தெரிவித்தார் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

மைத்திரி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்ட காலப் பகுதி முடிவடையவுள்ள நிலையில் இத் திட்டத்தின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சியிலிருக்கும் தற்போதைய அரசாங்கம் நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் தமிழ்மக்களுக்குப் பலவற்றைச் செய்துள்ளது.இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பல விடயங்களைச் செய்யவுள்ளது.மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஜனநாயகம் பிறந்து மக்களுக்குக் கருத்துச் சுதந்திரம் கிடைத்துள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பாடசாலைகளுக்குக் கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.மேலும் தரமுயர்த்தப்படாத சில பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இக் காலப் பகுதிக்குள் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் 100 சாரதிகள்,100 நடத்துனர்கள் அடங்கலாக 200 பேருக்கு நிரந்தரமாகவும்,இலவசமாகவும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தின் ஏழு தேசிய பாடசாலைகளில் 95 பேருக்கு அடுத்து வரும் கிழமைகளில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.தவிர 250 பேருக்குக் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களும் வழங்கப்படும். இதேபோல்,கிளிநொச்சி மாவட்டத்தில் அரச காணிகளிலிருந்த இரண்டாயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்களுக்குக் காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார். ( யாழ்.நகர் நிருபர்)