செய்திகள்

மைத்திரியின் புதிய அரசுடன் நெருக்கமாக செயற்பட தயாராகவுள்ளோம்: சம்பந்தன் சொல்கிறார்

தமிழ் மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி தங்களுடைய அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் ஜனநாயக முடிவின் மூலமாக நிறைவேற்றப்படலாம் என்ற நம்பிக்கையிலும், ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வை காண்பதற்குமான எண்ணத்திலேயே மைத்திரிபால சிறிசேனவுக்கு தங்களுடைய வாக்குகளை பெருமளவில் வழங்கியிருக்கிறார்கள் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழ் மக்களுடைய இந்த ஜனநாயக விருப்பை மதிக்கக்கூடிய வகையில் நாட்டிலுள்ள சகல கட்சியினர், அரசியல் பிரமுகர்கள் என சகலருடைய செயற்பாடுகளும் அமைய வேண்டுமெனவும் மேற்கூறிய கருமங்கள் சம்பந்தமாக புதிய ஜனாதிபதி, பிரதமருடன் நெருக்கமாகச் செயற்படத் நாம் தயார் எனவும் தெரிவித்தார்.

தேர்தலில் தமிழ்  மக்களுடைய வெளிப்பாடு தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எல்லா மாவட்ட மாகாணங்களிலும் வாக்குகளைப் பெற்றிருக்கின்ற போதிலும் விஷேடமாக வடகிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுடைய விகிதாசாரம் எழுபது வீதத்தை தாண்டியுள்ளது. சில  இடங்களில் எண்பது வீதத்தைக்கூட தாண்டியுள்ளது.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதற்கு நாம் தயாராகவுள்ளோம். கடந்த அரசாங்கத்துடனும் நெருக்கமாகச் செயற்படுவதற்கு நாம் தயாராகத்தான் இருந்தோம். ஆனால், அவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.