செய்திகள்

மைத்திரியை பலவீனப்படுத்த களமிறக்குகின்றார் குமார் குணரட்ணம்: அவசரமாக விசா வழங்கப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன், ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தை அரசாங்கம் களத்தில் இறக்கவுள்ளது. இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட குமார் இதற்காக விஷேடமாக விசா வழங்கப்பட்டு இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னிலை சோஷலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குமார் குணரட்ணம் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. பொது எதிரணிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான இரகசிய உடன்படிக்கையை இவர் பகிரங்கப்படுத்துவார் எனவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து தனியான ஒரு கட்சியை உருவாக்கிச் செயற்பட்ட குமார் குணரட்ணம், அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டு இரு வருடங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்டார். அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைக் கொண்ட இவர், இலங்கை திரும்புவதற்கு பின்னர் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இப்போது அவருக்கு விசா வழங்கப்பட்டிருப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் பப்புடு ஜகொட தெரிவித்திருக்கின்றார். குமார் குணரட்ணத்துக்கு விசா வழங்கப்பட்டிருப்பதாக குடிவரவுத் திணைக்களமும் தமக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குமார் குணரட்ணத்தின் மனைவியும் மகனும் ஏற்கனவே இலங்கை வந்திருப்பதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் இருக்கும் இடத்தை வெளியிட முடியாது எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இடதுசாரி அமைப்புக்களின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள துமிந்த நகமுவவுக்கு ஆதரவாக நடத்தப்படவுள்ள இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் குமார் குணரட்ணம் உரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தில் மைத்திரிபாலவுக்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான இரகசிய உடன்படிக்கை உட்பட பல விடயங்களை தமது தலைவர் அம்பலப்படுத்துவார் என கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவை ஜே.வி.பி. ஆதரிக்காத போதிலும், தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில் தமது பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.