செய்திகள்

மைத்திரி அரசுக்கு நட்புக்கரம் நீட்டும் சீனா: சிறப்புத் தூதுவரை அனுப்புகின்றது

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் நட்புறவைப் பலப்படுத்தும் முயற்சியில் சீன அரசாங்கம் இறங்கியிருக்கின்றது. இதற்கான பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

மைத்திரி அரசாங்கத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படலாம் என கொழும்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில்,  சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவுடனும், நெருக்கமான உறவுகளை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இந்தநிலையிலேயே இலங்கையுனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவும், தனது திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்துப் பேச்சு நடத்தவுமே, சிறப்புத் தூதுவர் ஒருவுரை சீன அரசாங்கம் கொழும்புக்கு அனுப்பிவைக்கவிருக்கின்றது.