செய்திகள்

மைத்திரி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்: முன்னாள் பிரதமரின் மகன் நாட்டைவிடடு செல்ல தடை

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலப்பகுதியில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் மகனான அனுராதா லங்கா ஜயரத்ன, நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கம்பளை நீதவான் உபுல் ராஜகருணாவே, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கம்பளை நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் காரியாலயத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை, அந்த காரியாலயத்தின் மீது சட்டவிரோதமான முறையில் உள்நுழைத்தமை, துப்பாக்கிப்பிரயோம் மேற்கொண்டமை மற்றும் அச்சுறுத்தியமே ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர், நீதிமன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் ஆஜராகவில்லை.

இதனையடுத்தே, முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்னவின் மகனும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அனுராதா லங்கா ஜயரத்ன, கம்பளை நகர சபையின் உறுப்பினர்கள் இருவர் மற்றும் உடபலாத்த பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட அதி பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பளை நகர சபை உறுப்பினர் தர்ஷிக நயன தரங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் வாகனங்களை தேடி பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.