செய்திகள்

மைத்திரி இன்று யாழ் விஜயம்: பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு, இராணுவ ரோந்து அதிகரிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் செல்கின்றார். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. இதனையடுத்து வடமாகாண முதலமைச்சர், ஆளுநர் ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சுக்களை நடத்துவார் எனத் தெரிகின்றது.

ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வது இதுதான் முதல்முறையாகும்.

இன்று நடைபெறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் அரச அதிபர்கள், அமைச்சு அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு நேற்று இரவு முதலே இராணுவப் பாதுகாப்பு பரவலாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரோந்து பணிகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்