செய்திகள்

மைத்திரி உரையாற்றிய கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு: பதற்றத்தை தணிக்க அதிரடிப்படை விரைவு

பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படை அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பரப்புரைக்கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன உரையாற்றி விட்டு இறங்கிச் சென்ற பின்னரே மேடை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

எனினும், இந்த சம்பவத்தில் ஐதேகவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் றொசான் ரணசிங்கவே பொறுப்பு என்று மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரகன்விலவில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவத்தையடுத்து ஐந்து வன்முறைச்சம்பவங்கள் அங்கு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  பதற்றநிலை காணப்படுவதால் நிலைமைகளைக் கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படை அங்கு விரைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.